வழிபாடு

சபரிமலையில் இருமுடியுடன் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்த 60 ஆயிரம் பக்தர்கள், நிலக்கல்லில் நேரடி முன்பதிவு செய்த பக்தர்கள் என பலரும் தரிசனத்திற்கு சபரிமலையில் திரண்டனர்.

கேரளம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மகர மற்றும் மண்டல விளக்கு பூஜை காலங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆண்டு தோறும் இந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை வருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மகர, மண்டல விளக்கு பூஜைகளுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து புதியு மேல்சாந்திகள் சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி (சபரிமலை), தாமோதரன் நம்பூதிரி (மாளிகப்புரம்) ஆகியோர் பொறுப்பேற்றனர்.

சாமி தரிசனம்

அதன்பிறகு பக்தர்கள் 18-ம் படி வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எதுவுமின்றி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி ஊர்வலங்களுடன் வந்து கோவில் நடையை திறந்தார்.

அதன்பிறகு அவர் பூைஜகளை செய்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைதிறந்த 2-வது நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்த 60 ஆயிரம் பக்தர்கள், நிலக்கல்லில் நேரடி முன்பதிவு செய்த பக்தர்கள் என பலரும் தரிசனத்திற்கு சபரிமலையில் திரண்டனர். பாரம்பரிய வனப்பாதை வழியாகவும் பக்தர்கள் சபரிமலை வருவதால் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைகள்

இன்று மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மதியம் 3 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படுகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டும், போலீசாரும் செய்து உள்ளனர். அதன்படி 18-ம் படியில் நிமிடத்திற்கு 75 முதல் 80 பேரை மட்டும் அனுமதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு பணி

இந்த பகுதியில் மட்டும் 250 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் பெரும்பாலும் பம்பாவில் தங்குவார்கள் என்பதால் அங்கு 3 பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கேரளம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

SCROLL FOR NEXT