இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் காலையிலிருந்து பக்தர்கள் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.
பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இதனால் பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம்.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் மற்றும் பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும், ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமாகும்.
அதன்படி இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் காலையிலிருந்து பக்தர்கள் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.
தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையிலே நடை திறக்கப்பட்டது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதேபோல் தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோவில், தெற்கு ராஜவீதி கலியுக வேங்கடேச பெருமாள் கோவில், மானம்புசாவடி பெருமாள் கோவில் உள்ளிட்ட தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.