புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை விரதத்தை நாம் மேற்கொண்டு, பெருமாளின் அருளை பெறுவோம்.
நாளை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை...
புரட்டாசி மாதம் என்றாலே நாராயணனின் நாமம் எங்கும் ஒலிக்கும் பக்தி மாதம். பூலோக வைகுண்டமான திருமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி கலியுகரதனாக அவதரித்தது இந்த மாதத்தில்தான் என்பது ஐதீகம். அதிலும் குடும்பத்தில் அமைதியும், நீண்ட ஆயுளும், சகல ஐஸ்வர்யங்களும் அள்ளித்தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மகத்துவம் நிறைந்தது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினார் என்கிறது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.
சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. அன்று பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலம் இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்த பலனை பெற முடியும் என சொல்வார்கள். இதிலிருந்தே புரட்டாசி சனிக்கிழமை விரதம் எவ்வளவு மகத்தானது என்பதை புரிந்து கொள்ளலாம்.
சனி பகவான், கலியுகத்திற்கு புறப்பட தயாரான சமயத்தில் அந்த வழியாக வந்த நாரதர், சனி பகவானின் கலியுக பயணம் பற்றி விசாரித்துள்ளார். பிறகு, “பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல். ஆனால், திருமலை பக்கம் மட்டும் தவறியும் சென்று விடாதே” என எச்சரித்து தனது கலகத்தை தொடங்கி உள்ளார். எதை செய்ய கூடாது என சொல்கிறார்களோ, அதை ஏன் செய்யக் கூடாது. செய்து பார்த்தால் என்ன நடக்கும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இயல்பாக வருவது போல் சனி பகவானுக்கும் ஏற்பட்டுள்ளது. நேராக திருமலைக்கு சென்று கால் வைத்த அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டார். அனைவரையும் துன்புறுத்தி பார்க்கும் சனி பகவானுக்கு, பூலோக வைகுண்டமாக திகழும் திருமலையில் என்ன வேலை என சனி பகவான் மீது கோபம் கொண்டார் திருமலை வேங்கடவன். அவரின் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்ட சனிபகவானிடம், திருமலை வந்து தன்னை வழிபடும் பக்தர்களை துன்புறுத்தக் கூடாது என கட்டளையும் இட்டார் மகாவிஷ்ணு. பிறகு மன்னிப்பு கேட்ட சனி பகவானுக்கு மனம் இறங்கி, தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடும் பக்தர்களுக்கு தனது அருள் பரிபூரணமாக கிடைக்கும் என மகா விஷ்ணுவே வரமளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
மேலும் நவகிரகங்களில் தன்னை மட்டுமே அனைவரும் வெறுப்பதாகவும், பாவ கிரகம் என ஒதுக்குவதாக கவலை கொண்ட சனி பகவானுக்கு மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து, இதற்கு ஒரு தீர்வு கேட்கும் படி யோசனை வழங்கி உள்ளார் நாரதர். அதை ஏற்று, சனி பகவானும் கடும் தவம் செய்துள்ளார். இதனை ஏற்று அவர் முன் தோன்றிய மகா விஷ்ணுவிடம், சனி பகவான் தனது மனக்குறையை கூறி உள்ளார். இதனால் சனிபகவானின் கவலையை போக்க விரும்பிய மகா விஷ்ணு, மற்ற மாதங்களை விட தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் அதிகமானவர்கள் உன்னை விரும்பி வழிபடுவார்கள். அப்படி வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக வாக்களித்ததாக ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி, வளமான வாழ்க்கையை பெறலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து சனிபகவானுக்கு நல்லெண்ணையில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, புரட்டாசி சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதமிருந்து பெருமாளை வழிபட்டதன் பலனாகவே அவர்கள் போரில் வென்று, தாங்கள் இழந்த நாடு, ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் திரும்ப பெற்றதாக புராண கதைகள் சொல்கின்றன. இத்தகைய புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை விரதத்தை நாம் மேற்கொண்டு, பெருமாளின் அருளை பெறுவோம்.