முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இத்திரு விழாவையொட்டி இன்று அதிகாலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை கம்பத்தடி மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, காலை 7.15 மணியளவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலை தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், அன்னம், பூதம், சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 23-ம் தேதி மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் சாற்றி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள் 24-ம் தேதி காலை கார்த்திகை சிறிய சட்டத் தேரோட்டமும், மாலையில் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் வைபவமும் நடைபெற உள்ளது.
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று காலை 8 மணியளவில் கந்த சஷ்டி தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒரே நாளில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றமும், கந்த சஷ்டி தேரோட்டமும் இணைந்து வந்ததால் கோவில் வளாகம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
வழக்கமாக கோவில் கொடியேற்றத்தின் போது சுப்பிரமணிய சுவாமி சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம். இன்று கார்த்திகை தேரோட்டம் காரணமாக தங்கமயில் வாகனத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இன்று மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும், மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்குத் தங்கக் கவச அலங்காரமும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில் கோவில் துணை ஆணையர் செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.