ஆடிப் பெருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட மாநகரத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். அந்த வகையில், சேலத்தில் ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் 22 நாட்கள் ஆடிப்பெருவிழா கொண்டாடப்படும். இதையொட்டி சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதல் விழா நடந்தது.
இவ்விழாவையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை கோட்டை மாரியம்மன் கோவிலில் இரவு 8 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி இன்று மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு பவுர்ணமி 108 திருவிளக்கு பூஜையும், திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது.
இதே போல் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன், பொன்னம்மா பேட்டை மாரியம்மன், பாவடி மாரியம்மன், பட்டை கோவில் சின்னமாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் உள்பட மாநகரத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆகஸ்ட் 3-ந் தேதி, ஆடி 18 சிறப்பு பூஜையும், இரவு சக்தி அழைப்பும், 4-ந் தேதி காலை 8 மணிக்கு சக்தி கரகமும், 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை பொங்கல், மாவிளக்கு வைத்தல், உருளுதண்டம், உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
மேலும் கோட்டை மாரியம்மன் கோவிலில் 7-ந் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 8-ந் தேதி அதிகாலை கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் சேர்த்தல், 10-ந் தேதி இரவு சப்தாபரணம், 11-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகாஅபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 17-ந் தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.