வழிபாடு

வேண்டிய வரம் அருளும் மண்டைக்காடு பகவதி அம்மன்

ஆடி மாத செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தர்கள் திரண்டு வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள்

குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பெண்களின் சபரிமலை என்றும் பெயருண்டு. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கடும் விரதமிருந்து இருமுடி கட்டி செல்வார்கள். இதேபோல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். இதனால் இந்த கோவிலை பெண்களின் சபரிமலை என்று அழைக்கிறார்கள்.

இருமுடி

மண்டைக்காட்டுக்கு இருமுடி தாங்கி வரும் பெண்கள், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அந்த புனித பயணத்தை மேற்கொள்கிறார்கள். மண்டைக்காடு தமிழகத்தில் இருந்தாலும் கேரள பெண்களே அதிகளவில் இங்கு இருமுடி தாங்கி வருகிறார்கள். அரபிக்கடலோரம் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் புகழ் பெற்றது. 10-ம் நாள் திருவிழாவின்போது நடைபெறும் ஒடுக்கு பூஜை விசேஷமானது. 9 மண் பானை, 4 சட்டி, ஒரு பனை ஓலைப்பெட்டி ஆகியவற்றில் 11 வகை பதார்த்தங்களையும் 2 குடம் தேனையும் கொண்டு படையலிட்டு பூஜை செய்வது தான் ஒடுக்கு பூஜை. நள்ளிரவு 12 மணிக்கு இந்த பூஜைகள் நடைபெறும். ஒடுக்கு பூஜையில் படைத்த அன்னத்தை வாய் பேசாத குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை

நேர்ச்சையின் பேரில் ஆண் குழந்தைகளுக்கு உடலில் அலகு குத்தும் குத்தியோட்டம் நிகழ்ச்சியும், பெண் குழந்தைகள் மாவிளக்கு ஏந்தி வருதலும் 10-ம் நாள் திருநாளில் இடம் பெறுகிறது. இங்கு நடைபெறும் வலிய படுக்கை பூஜையும் சிறப்பு பெற்றது. மாசி திருவிழாவின் 6-ம் நாளும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், மீனபரணி அன்றும் (பங்குனி மாதம்) இந்த பூஜை நடத்தப்படுகிறது. கோவில் நைவேத்தியங்களில் முத்தப்பம், மண்டையப்பம் முக்கியமானது. அரிசி மாவு, சர்க்கரை சேர்த்து தயாரிப்பது முத்தப்பம். இது வெப்பு நோய் வராமலோ, வந்தால் குணமாவதற்கோ உரிய நேர்ச்சை. மண்டையப்பம் அரிசி மாவு, சர்க்கரை, சிறு பயிறு முதலியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.

பெண்கள் சுமந்து வரும் இருமுடி

இது உரித்த தேங்காய் அளவில் இருக்கும். தலைநோய் தீர கொடுக்கப்படும் நேர்ச்சை இது. இவை தவிர வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் முதலியவையும் உண்டு. இந்த கோவிலுக்கு பெண்கள் சுமந்து வரும் இருமுடியில் தேங்காய், அரிசி, மஞ்சள் பொடி, வறுத்த நெல் பொடி, பொரி, நல்லமிளகு ஆகியவை இருக்கும். கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்ததும் இருமுடியில் இருக்கும் தேங்காயை எடுத்து உடைப்பார்கள். பின்னர் மஞ்சள் பொடியையும், நல்ல மிளகையும் கோவில் முன்பு நடையில் வைப்பார்கள். மண்ணை குவித்து வறுத்த நெல் பொடியை அதன் மீது தூவி அம்மனாக நினைத்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

அம்மன்

ஆடி மாத செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தர்கள் திரண்டு வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் கொழுக்கட்டை அவித்து அம்மனுக்கு படைப்பார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அம்மன், புற்று ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அம்மனுக்கு நாள்தோறும் பூஜையும் வழிபாடுகளும் நடந்து வருவதால் இந்த புற்றும் நாள்தோறும் வளர்ந்து வந்தது. இதனால் அம்மனின் புற்று சிறிய மலைபோல பிரமிக்க வைக்கும் வகையில் பக்தி பரவசத்துடன் காட்சி அளிக்கிறது.

பக்தர்கள்

இது தேவியின் தெய்வீக ரூபத்தை மேலும் அதிகரித்து காட்சி தருவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள். அம்மனை தரிசிக்க வருவோருக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் வேண்டிய வரத்தை அருளுவார். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தாய் போல கருணை மழை பொழிவார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனால் தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது. அம்மனை தரிசிக்க பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏன் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனின் ஆசியை பெற்றுச்செல்கிறார்கள்.