மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான விழா இன்று (21-ந்தேதி) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மங்கள இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, பட்டாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தோரணங்கள், வண்ண மலர் அலங்காரங்கள், தூப நறுமணம் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதன் மூலம் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பூஜைகள், வாகன சேவைகள், மண்டகப்படி உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற உள்ளன.
இன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. அதன்படி, நாளை (22-ந்தேதி) காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 23-ந்தேதி இரவு அனுமார் வாகனத்திலும், 24-ந்தேதி இரவு கருட வாகனத்திலும் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுகிறார்.
26-ந்தேதி மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள் இரவு யானை வாகனத்திலும், 27-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 28-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 29-ந்தேதி காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து 30-ந் தேதி தீர்த்தவாரியும், 31-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறும்.
ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.