தேரில் பவனி வந்து தேர் நிலையைம் சென்றடைதல், அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவில் பூசாரியிடம் காப்பு கட்டி தாங்கள் நேர்த்திக்கடன் பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலிக்க தொடங்கினர். விழா நாட்களில் தினமும் இரவு பல்ேவறு வாகனங்களில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா நடந்தது
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை முதலே காளி, அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தவும், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் காலை முதலே கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
காலை 6 மணி, 7.30 மணி, காலை 9 மணி, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். இதனால் எருமை முகமாக உருமாறிய மகிஷா சூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே சாந்தாபிஷேக ஆராதனையும் நடந்தது.
தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையைம் சென்றடைதல், அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.