சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள். ஆடித்திருவிழாவில் கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டனர். மேலும் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், உருளு தண்டம் செய்தும், மாவிளக்கு ஏந்தியும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்வான ேதரோட்டம் இன்று (7-ந் தேதி) காலை 10 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைந்தது. தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கரகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் புடை சூழ மாரியம்மன் தேர் ஆடி அசைந்தபடி சென்றது. தேர் ஊர்வலத்திற்கு முன்பு அம்மன் வேடம் அணிந்து ஆடிபாடி நாதஸ்வரம் பம்பை, கேரள செண்டை வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஆடி பாடிய படி சென்றனர். மேலும் குழந்தைகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தாரை தப்பட்டை நிகழ்ச்சிகளும் கண்ணை கவரும் வகையில் நடந்தது.
மாரியம்மன் தேர் முதல் அக்ரஹாரம், தேர் வீதி, ஆனந்தா இறக்கம், பட்ைட கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் டவுன் போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மதியம் 12 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுக பக்தர்களுக்கு அன்னதானம், மோர், கம்பங்கூழ் உள்பட பிரசாதங்கள் பல்வேறு தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. ேதரோட்டத்தையொட்டி கோவில் வளாகம் மற்றும் தேர் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதையொட்டி கோவில் சுற்றுப்புற பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி கடைவீதி பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுத சுரபி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் த.வெ.க. மகளிரணி மாநில துணை அமைப்பாளர் பிரியா பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதே போல் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தேர்நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.