கோட்டை மாரியம்மன்
கோட்டை மாரியம்மன் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக வரலாறு கூறுகிறது. சேலம் மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் இருந்து அன்னை கோட்டை மாரியம்மனை வணங்கி விட்டு தான் பல்வேறு நல்ல காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர்.
சேலம் கோட்டை பெரியமாரியம்மன் அருளே வடிவாக காட்சியளிக்கிறாள். அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத கின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.
அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள். ஆரம்பத்தில் இந்த கோவிலின் கருவறை சிறியதாகவும் மிக அழகிய முறையிலும் அமைந்தது. தற்போது அன்னை வீற்றிருக்கும் கருவறை கம்பீரமாய் உருவாகி உள்ளது.
தினந்தோறும் கோட்டை மாரியம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி வேண்டி செல்கின்றனர்.
அதுவும் சேலம் என்றாலே கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவும், அதனை தொடர்ந்து நடைபெறும் அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், வண்டி வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் தமிழக அளவில் பிரபலம் ஆகும். ஆடி மாத பண்டிகை நேரத்தில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
அதோடு இல்லாமல் எட்டு பட்டியை கட்டி அரசாளும் அன்னை கோட்டை மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக்கடைவீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் என சேலம் மாநகரில் உள்ள மற்ற 7 கோவில்களிலும் திருவிழா நடைபெறும். அன்றைய நாட்கள் சேலம் மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
ஆடிப்பண்டிகையின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மற்றும் அலகுகுத்துதல் புதன்கிழமைகளில் வரும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இதனால் அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்படும்.சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சாரை, சாரையாக வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.