கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.
திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலையில் கோவிலை சுற்றி வெங்கடாசலபதி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக திருப்பதியில் இருப்பது போன்று பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், கற்பக விருட்ச வாகனம், அனுமன் வாகனம், கஜ வாகனம், சூரிய சந்திர பிரபா வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், மோகினி பல்லக்கு ஆகிய 12 வாகனங்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து நன்கொடையாக பெற்று திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து ஏழு தலை நாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய மூன்று புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா வரும் நவம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.