ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்த அவர்களை, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு ஆகியோர் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
ஊர்வலம் தொடங்கும் முன் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள தேவாங்குல மண்டபத்தில் அர்ச்சகர்கள் ஏ.வி.தர்மாரெட்டிக்கு தலைப்பாகை கட்டி, தலையில் ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரங்களை வைத்தனர். ஊர்வலமாக சென்ற அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர். அவர்களுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.