இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் குழு உறுப்பினராக இருக்கும் சி.ரா.மு.ராமமூர்த்தி பூசாரி தற்போது கோவில் மேம்பாட்டு பணிகளை அரசின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்து வருகிறார். தன் மூதாதையர்களின் பரம்பரை சிறப்பு உணர்ந்து அவர் அம்மனுக்கு கைங்கர்யம் செய்து வருகிறார். அவர் அளித்த பேட்டி:-
சுமார் 500 ஆண்டுகளாக எங்களது பரம்பரை இத்தல பணியை செய்து வருகிறது. கோவில் நிர்வாகிகளாகவும், பூசாரிகளாகவும் எங்கள் பரம்பரை உள்ளது. இதை நாங்கள் மிகவும் உன்னதமாக கருதுகிறோம். அம்மனை இன்னும் 10 நிமிடம் பார்க்க மாட்டோமா? என்று மக்கள் தவம் இருக்கும் இந்த காலத்தில், அம்மனுக்கு சேவையாற்றுவதை நாங்கள் எங்களுக்கு கிடைத்த கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறோம்.
எல்லா முக்கிய கோவில்களிலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். இத்தலத்தில் சிவேபாக ஞானசித்தர் அடங்கி உள்ளார். 1500 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அம்பாள் காட்சி கொடுத்தாள். அவர் நிஷ்டையாகி உள்ள இடத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மன் இங்கு சிவசொரூபியாக இருக்கிறாள். இதனால் அவளுக்கு எதிரில் நந்தி வைக்கப்பட்டுள்ளது. அவளது வாகனமாக ரிஷபம் உள்ளது. மற்ற அம்மன் தலங்களில் குங்குமம் கொடுப்பார்கள். ஆனால் இத்தலத்தில் விபூதிதான் பிரதானமாக அளிக்கப்படுகிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கண் கண்ட பேசும் தெய்வம் ஆவாள். அவளிடம் மனக்குறையை கொட்டினால் மனமிறங்கி ஆறுதல் தருவாள் என்பது பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவமாகும். இதன்மூலம் வேண்டிய வரம் கொடுத்தாள். ஏராளமான பக்தர்களுக்கு அவள் கனவிலேயே தீர்வு சொல்லியுள்ளாள். இதன்மூலம் பக்தர்கள் ஈர்க்கப்பட்டனர். மாரியம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்? அம்மை நோய் உடனே தீரும். கண்நோய்கள் குணமாகும். வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். குறிப்பாக குழந்தை வரம் கேட்டு தொட்டில் கட்டினால் உடனே பலன் கிடைக்கிறது.
நம்பி தொழுதவர்கள் யாரையும் இந்த அம்மன் கைவிட்டதே இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பக்தர், அம்மன் தன்வாழ்வில் நிகழ்த்திய அதிசயத்தை சொல்லியபடிதான் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக வாய் பேசாமல் இருந்த என் தம்பி, தற்போது மெல்ல பேச தொடங்கி இருக்கிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் பூஜை வைத்தேபாது, ஒரு பெண்ணை மரண படுக்கையில் தூக்கி வந்தனர்.
டாக்டர்கள் கைவிட்டு விட்ட நிலையில் அந்த பெண் 21 நாள் கோவிலில் விரதம் இருந்து தினமும் அம்மன் தீர்த்தத்தை குடித்து வந்தார். அம்மன் அருளால் உயிர் பிழைத்த அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆளே அடையாளம் தெரியாதபடி செல்வ செழிப்புடன் வந்தார். இதுவும் அம்மனின் திருவிளையாடல்தான்.
ராஜேந்திரன் பூசாரி ஒரு தடவை மின்சாரத்தால் தாக்கப்பட்டார். மின்சாரம் பாய்ந்ததும் மாரி தாயே என்று அவர் அலற, மறு நிமிடம் அங்கு மாரியம்மன் தோன்றி அவரை காப்பாற்றி இருக்கிறாள். இப்படி அம்மனின் திருவிளையாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அம்மனுக்கு எலுமிச்சம் பழமாலை மிகவும் பிடிக்கும். அவளை நினைத்து மாவிளக்கு போட்டால் வயிற்று வலி தீரும். அவளுக்கு தேங்காய், பழம் முக்கியம், அவளுடைய எல்லா வழிபாடுகளிலும் தவறாமல் தேங்காய் இடம் பெறும்.
உரிய காலத்தில் திருமணம் நடைெபற பட்டு சாத்தி வழிபடுதல் வேண்டும். இது தவிர தாலிப் பொட்டு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
காலம்,காலமாக பக்தர்கள் இருக்கன்குடிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தை மாதத்தில் அதிக பக்தர்கள் பாத யாத்திரை வருகிறார்கள். இதேபோல் திருக்கோவில் வளர்ச்சிக்காக அம்மனின் அருளாசிப்படி பல்வேறு பணிகள் சிறப்புற நடந்து வருகிறது.