விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் இந்த மாதம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
அதன்படி கடந்த மாதம் 17-ந் தேதி ஆடி மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமையைெயாட்டி இருக்கன்குடியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2 மற்றும் 3-வது வெள்ளிக்கிழமைகள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு மாவட்டங்களை சேர்நத பெண்கள் உள்பட ஏராளமானோர் விரதமிருந்து அக்னி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல், மொட்டை போடுதல், பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இருக்கன்குடியில் ஆடி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இன்று 4-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி திருவிழா கொடியினை ஏற்றினர்.
இக்கொடியேற்ற நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோவன், பரம்பரை அரங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் பணியாளர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என். மேட்டுப்பட்டி, அப்பனேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை குடும்பத்துடன் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.