வழிபாடு

கோட்சார குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்

குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.

நவக்கிரகங்களின் இயக்கமே மனித வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் ஏற்படுத்துகிறது. கிரகங்களின் இயக்கத்தில் குருவின் செயல்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனிதர்கள் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் குருபலம் அவசியம். நவக்கிரகங்களில் முதன்மையான சுபகிரகமான குரு பகவான் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே, வாழ்க்கை சுபீட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும்.

தன காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான், மங்களகாரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக்கிறார். இறை வழிபாட்டிற்கும், ஞானத்திற்கும் குரு பகவானே காரகனாகிறார். இவர் தான் நிற்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது.

குரு திசை

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கும் போது, 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது. குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள்.

திருமணம்

வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும். பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களின் மீது குரு பார்வை இருந்தால், அவற்றின் தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. குரு நின்ற இடம் பாழ் என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது. கால புருஷ தத்துவப் படி குரு 9, 12 க்குடையவர். தனுசு ராசியில் மூலத்திரிகோணம் ஆட்சி. மீனத்தில் ஆட்சி. தனுசு ஒரு நெருப்பு ராசி, மீனம் நீர் ராசி. இரண்டுமே உபய ராசி.

அரசியல்

குரு நட்சத்திரத்திலும், குருவின் பார்வையில் அதிக கிரகம் இருந்தால் அது யோக ஜாதகம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீய பலன்களை குறைத்து, நல்ல பலன்கள் நடக்கும். பாக்கிய ஸ்தானம் மற்றும் அயன சயன போக ஸ்தானத்திற்கு பொறுப்பு வகிக்கும் குரு பகவான் நல்ல நிலையில் இருக்கும் போது தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குல தெய்வ அருள், புண்ணிய மற்றும் தீர்த்த யாத்திரை, அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமை பதவியில் அமர வைத்து பல மக்களை வழி நடத்தும் பொறுப்பு தருவார்.

சமூகத்தில் பெரிய‌ மனித தோரணை ஏற்படுத்த கூடியவர்‌. திருமணம், இல்லற இன்பம், வெளிநாட்டு வாழ்க்கை மோட்சம், முக்தி நிலைபெறுதல் போன்றவற்றை 12ம்மிடத்தின் மூலம் தருவார். குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு ஒரு ஜாதகத்தில் கெட்டு போக கூடாது.

ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும். ஒருவரின் சுய ஜாதகத்தில் இல்லாத யோகங்களை குரு பகவான் தனது கோட்சார காலங்களில் வழங்குவார். இந்தக் கட்டுரையில் கோச்சார குரு பகவானால் ஏற்படக்கூடிய யோகங்களை பார்க்கலாம்.

‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி

சிவராஜயோகம்

கோச்சார குரு பகவான் சுய ஜாதகத்தில் உள்ள சூரியனுடன் தொடர்பு பெறுவது சிவராஜ யோகமாகும். பரமாத்மா, ஜீவாத்மா சம்யோகம் என்றும் கூறலாம். பரமாத்மாவை குறிக்கும் கிரகமான சூரியனும் ஜீவாத்மாவைக் குறிக்கும் கிரகமான குருவும் சம்பந்தம் பெறுகிறது. சூரியனின் கதிர்வீச்சை திரும்பவும், அவருக்கே பிரதிபலிப்பதன் மூலம் சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவியை அளிக்கும். எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆன்மபலம், ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள் கிடைக்கும்.

குருச் சந்திரயோகம்

கோச்சார குரு பகவான் சுய ஜாதகத்தில் உள்ள சந்திரனை தொடர்பு கொள்ளும் போது குரு சந்திரயோகம் ஏற்படுகிறது. ஜாதகர் எண்ணமும் செயல்பாடுகளும் எப்போதும் உயர்ந்த இலக்குகளை கொண்டதாக இருக்கும், அவற்றை அடையும் குறிக்கோளை தனக்கு தானே உருவாக்கி கொள்வார்கள். உடல் ரீதியான மனரீதியான பாதிப்புகள் அகலும். தீராத தீர்க்க முடியாத நோய்க்கு வைத்தியம் கிடைக்கும். உடலும் மனமும் புத்துணர்வு அடையும். ஜாதகரின் எண்ணங்களும் விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறும். வெளியில் சொல்ல முடியாத மறைமுகமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

குரு மங்கள யோகம்

கோச்சார குரு பகவான் சுய ஜாதகத்தில் உள்ள செவ்வாயுடன் சம்மந்தம் பெறும் போது குருமங்கள யோகம் உருவாகிறது. பொன், பொருள் பூமி சேர்க்கையோடு புகழோடு வாழும் சூழ்நிலை உருவாகும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். புதிய வீடு, வாகன யோகம் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து விற்பனையாகும். ரத்தம் தொடர்பான நோய் நீங்கும். ரத்த விருத்தி உண்டாகும். மத்திய அரசு வேலை, மத்திய அரசின் சன்மானம் கிடைக்கும். தர்மவழி பின்பற்று பவர்களாவும் கடமை தவறாதவர்களாவும், சுறுசுறுப்பானவர்களாகவும், நல்ல ஆற்றல் உள்ளவர்களாகவும், எதையும் விரைவாக புரிந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும்.

சரஸ்வதி யோகம்

அறிவு மற்றும் ஞானத்தின் காரகரான குரு பகவான், புத்தி கூர்மைக்கு காரக கிரகமான புதனுடன் சம்பந்தம் பெறுவது சரஸ்வதி யோகமாகும். கல்வி, கலை ஆர்வம், மற்றும் பேச்சாற்றல் கூடும். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கூடும். தொழில் வியாபாரம், எழுத்துத்துறை, கல்வி, நிதி மற்றும் ஆலோசனைத் தொழில்களில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவார்கள். தொழில் வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். சமுதாயத்தில் மிகச்சிறந்த அந்தஸ்தும், புகழும் இவர்களைத் தேடி வரும். சுமாராக படிக்கும் பிள்ளைகள் கூட நல்ல பெயரெடுக்கும் பிள்ளையாக மாறும்.

கோடீஸ்வர யோகம்

கோட்சார குரு பகவான் ஜனன கால குருவை தொடர்பு கொள்ளும்போது கோடீஸ்வர யோகம் உருவாகும். புகழ், செல்வம், யோகம் போன்றவைகளை அடைவார்கள். அரசாங்கம் மூலமாக திடீர் அதிர்ஷ்டம், ஆன்மீகம், ஜோதிடம் ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி, நல்ல வீடு, வாகனம் வாங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும். மக்கள் மத்தியில் முக்கிய நபராக மற்றவர்களால் மதிக்ககூடிய மரியாதை அந்தஸ்தை ஜாதகர் பெறுவார். தங்கம், மாணிக்கம் மற்றும் தெய்வீகமான அணி கலன்கள் அணிந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும். வரா கடன்கள் வசூலாகும். ராஜயோகம் பெற்று, அதற்கேற்ற தசா புக்திகள் நடக்கும் காலங்களில் கோடிக்கணக்கான பணத்திற்கு அதிபதியான குரு பகவான் கோடீஸ்வர யோகம் வழங்குவார்.

தனயோகம்

அறிவு, ஆன்மீகம், நீதி ஆகியவற்றிற்கு அதிபதியான கோட்சார குரு பகவான் ஜனன கால சுக்கிரனுடன் சம்பந்தம் பெறும் போது கலை, ஈர்ப்பு, ஆடம்பரம் ஆகியவற்றில் ஆர்வத்தை அதிகரிக்கும். ஜாதகருக்கு சிறந்த அறிவுத் திறனும் பகுத்தறிவும், சாதுரியமான பேச்சையும் வழங்குவார். இந்த இணைவு ஜாதகரின் தன, லாப ஸ்தானத்தில் நிகழ்ந்தால், நிதி நிலைமை உயரும். தொழிலில் அபரிமிதமான லாபமும், சேமிக்கும் திறனும் அதிகரிக்கும். பொருளாதார மேன்மையும் சுபகாரியங்களும் கைகூடும். திருமண தடை அகன்று திருமணம் நடைபெறும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நகை வாங்கலாம். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்பார்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள்.

தர்மகர்மாதிபதி யோகம்

கால புருஷ தர்மாதிபதியான குருபகவான் தனது கோச்சாரத்தில் சுய ஜாதகத்தில் உள்ள சனிபகவானை தொடர்பு கொள்ளும் போது தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படும். இந்த யோக அமைப்பில் சனி பகவான் பலவீனம், பகை, நீசம் போன்ற நிலைகளை அடையாமலும், பாவக்கிரகங்களின் தொடர்புகள் எதுவுமில்லாமல், வலுவாக இருப்பதன் மூலம் மிகுதியான சுப பலன் உண்டு. சிரஞ்சீவி போன்று அழியா புகழ், நல்ல தேக சுகம் நிறைந்தவர்களாகவும் ஆன்மபலம் படைத்தவர்களாகவும், உயர்ந்த தலைமை பண்பை உடையவராகவும் இருப்பார்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். தொழில் மேன்மை கடன் நிவர்த்தி போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.

குருச் சண்டாள யோகம்

கோச்சார குரு பகவான் ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள ராகுவுடன் சம்பந்தம் பெறும் போது குருச்சண்டாள யோகம் உருவாகும். ஆன்மீகம், அறிவு மற்றும் நற்பண்புகளுக்குரிய குரு பகவான், மாயை மற்றும் பேராசைக்குரிய ராகுவுடன் சம்பந்தம் பெறும் நேரங்களில் முடிவுகளில் குழப்பம், பண நெருக்கடி, மற்றும் கொள்கைகளில் தடுமாற்றம் ஏற்படலாம். இந்த இணைவில் குரு வலிமையாக இருந்தால், அதுவே எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பண வரவையும் தரும். குருபலம் குறைந்து ராகு வலுப்பெற்றால் பெரிய பண இழப்பு குழந்தைகளால் மன அழுத்தம் உருவாகும். ஆன்மீக நாட்டம் குறையும்.கடுமையான புத்திரதோஷத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பிறக்கச் செய்கிறது.

கேள யோகம்

கோட்சார குரு பகவான் ஜனன கால ஜாதகத்தில் உள்ள கேது பகவானை தொடர்பு கொள்ளும்போது கேள யோகம் உருவாகும். இரண்டு ஆன்மீக கிரகங்களின் சேர்க்கை ஏற்படும் போது தெய்வீக வித்தைகளில், குறிப்பாக ஜோதிடத்தில் தேர்ச்சி அடையலாம். நல்ல விஷயங்களை உலக மக்களுக்குப் போதிக்கும் ஆற்றலும், அதன் மூலம் புகழ் பெறும் வாய்ப்பும் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நாத்திகர்கள் கூட ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள். குரு பகவான் கோடிக்கணக்கான பணத்திற்கு அதிபதியாகும்.கடன், வறுமை, வழக்கிற்கு காரணமான கிரகம் கேது பகவானுடன் சம்பந்தம் பெரும்போது கடன் உருவாகும். பண இழப்பு பணம் ஏமாற்றம் நடக்கும். இப்படி மனித வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் குரு பலத்தினால் தான் நடத்தி தரப்படுகிறது என்பதால், ஒருவரது ஜாதகத்தில் குருவின் பங்கு அளப்பரியது.

செல்: 98652 20406