வழிபாடு

சுவாமிமலை முருகன் தேரோட்டம் கோலாகலம்

தேரானது 4 ரத வீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்தவாறு நிலையை அடைந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

4-ம் படை வீடு

இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக விளங்குகிறது. ‘ஓம்’ எனும் பிரணவ மந்திர பொருளை தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்து சுவாமிக்கு நாதன் ஆனதால் இத்தல முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என அழைக்கப்படுகிறார்.

கார்த்திகை பெருவிழா

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை பெருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 16-ந்தேதி கொடியேற்றப்பட்டு, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலை கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜையுடன் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.

இன்று தேரோட்டம்

தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலாவும், மாலை இடும்ப வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது.

அரோகரா.. கோஷம் முழங்க

முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். தேரானது 4 ரத வீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்தவாறு நிலையை அடைந்தது.

சிறப்பு பஸ்கள்

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஷர்மு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வசதிக்காக சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் மாதவி தலைமையில் அடிப்படை வசதிகளை பணியாளர்கள் செய்திருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

தீர்த்தவாரி

தொடர்ந்து, இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், சொக்கப்பனை கொளுத்துதல் எனும் தீபக்காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, நாளை (புதன்கிழமை)காவிரியில் தீர்த்தவாரியும், 26-ந்தேதி ஏனைய பரிவாரங்களுடன் சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி, தக்கார் சுவாமிநாதன் மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT