சுய கவுரவம் விரும்பும் சிம்ம ராசியினரே!
பிறக்கப் போகும் சித்திரை மாதம் உங்களின் ராசி அதிபதி சூரியன் 9ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். நீங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல போகிறீர்கள். இதனால் லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த சில முக்கிய திருப்பங்கள் உங்கள் வாழ்வில் உண்டாகும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. சிலருக்கு மதம் மாறும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும். எதிரிகளின் தொல்லை குறையும்.
குடும்பத்திற்கு கோடி நன்மைகள் உண்டாகும். ஒரே வீட்டில் வசித்தும் ஒருவருடன் மற்றொருவர் பேசாமல் ஆளுக்கொரு தீவாக மொபைலுடன் வாழ்ந்த நிலை மாறும். குடும்பம் மகிழ்ச்சியாக மாறும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். அனைவரும் விட்டுக் கொடுத்து இயல்பாக வாழ்வீர்கள். ஈகோ குறையும். சொல்வாக்கால் செல்வாக்கு உயரும்.
குடும்ப சந்தோஷமாக இருக்கும். கூடி வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை உணர்வீர்கள். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களள், வேற்று மதத்தவரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். திருமணத்திற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. சிலர் காதல் திருமணத்தால் அவமானப்பட வாய்ப்பு உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு அஷ்டம சனியால் எந்த பாதிப்பும் இருக்காது.வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.மாணவ மாணவிகள் கவனித்து படித்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும்.தொலைந்த, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நேரத்திற்கு சத்தான உணவாக நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுத்தால் எந்த வியாதியும் அண்டாது.வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பொருளாதாரம்: தன ஸ்தானமான இரண்டாம் இடத்தின் அதிபதி புத பகவான் நீச்சம் பெற்றாலும் குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதாரத்தில் தடையில்லாத வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், உணவுத் தொழில் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.விரும்பிய கடன் தொகை கிடைக்கும். வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் என சுப செலவுகள் மிகுதியாக இருக்கும்.
பெண்கள்: கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மனதிற்கும் நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். குடும்பச் சுமை சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உள்ளது.பிறந்த வீட்டு சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் உங்களை கவுரவப்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு வெகு விரைவில் குருப் பார்வை கிடைக்கப் போவதால் வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: எதிர்பார்த்த சம்பளத்தில் மனதிற்கு பிடித்த நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும்.இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். வேலை மாற்றம் செய்பவர்கள் அப்பாயின்மென்ட ஆர்டர் வாங்கிய பிறகு பழைய வேலையை விட வேண்டும். சிலர் பழைய வேலையில் இருந்து விடுபட்டு புதிய வேலைக்கு செல்லலாம். சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். முக்கிய தேவைகளுக்கு எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசுப்பணி, வெளிநாட்டுப் பணி போன்ற விருப்பங்கள் நிறைவேறும்.
மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது.
முதலீட்டாளர்கள்: பூர்வீக குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். தொழிலில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். மிகுதியான லாபமும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். சனியின் நிலை சற்று சாதகமற்று இருப்பதால் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிலர் குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சித்து சட்டத்தின் பிடியில் சிக்கலாம்.குரு விரய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் முக்கியப் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.புதியதாக தொழில் துவங்குபவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் நடத்தலாம்.
அரசியல்வாதிகள்: லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள்தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கட்சியில் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்.சனி+செவ்வாய் சேர்க்கை.. ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுவதால் அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.
உயில் பிரச்சனை தலை தூக்கும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயில், ஆவணங்களில் சிலர் திருத்தம் செய்வார்கள். பாகப் பிரிவினையில் மன பேதம் மிகுதியாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக் கசப்பு உருவாகும். கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள்.
சிலருக்கு புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும்.கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்லலாம். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம்.
சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம். உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். வெற்றி கை நழுவும் , புகழும் மரியாைதையும் குறையும். நிம்மதிக்கு வழி இருக்கிறதா என்ற சிந்தனை மேலோங்கும்.தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று சூரிய ஓரையில் வில்வ அர்ச்சனை சிவ வழிபாடு செய்து வர நன்மைகள் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை சிவனையும், சக்தியையும் வழிபட அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும்.
புத்தி சாதுரியம் நிறைந்த கன்னி ராசியினரே!
பிறக்கப் போகும் சித்திரை மாதத்தில் உங்களின் ராசி அதிபதி புதன் குரு பகவானுடன் பரிவர்த்தனை பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். புத பகவானின் ஆசி பெற்ற கன்னி ராசியினர் இந்த தமிழ் மாதம் அதிர்ஷ்டத்துடன் வாழப் போகிறீர்கள்.குருவின் பார்வை கவசமாக காக்கும் என்பதால் தைரியமாக, தெம்பாக இருக்கலாம். குல தெய்வ அனுகிரகம் மற்றும் முன்னோர்களில் நல் ஆசிகள் உள்ளது.
எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.
குடும்ப உறவுகளின் ஒற்றுமையை நிர்ணயிப்பதில் பணமும், சொத்தும் முக்கிய காரணியாக உள்ளது. பணம் குவியும் காலத்தில் உறவுகள் ரத்தின கம்பளம் விரிக்கும். சில நேரத்தில் ஏளனப்படுத்தும். ராசியில் கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போன்ற உணர்வு உண்டாகும்.யாரையும் பார்க்கவோ, பேசவோ பிடிக்காது. சிலர் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம்.
குரு தசை, புத்தி நடப்பவர்களுக்கு குரு பலத்தால் பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் விமரிசையாக நடக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார்.
இழுபறியாக இருந்துவந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாடவைக்கும். தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். மாணவர்களுக்கு படிக்கும் பாடம் நன்றாக புரியும். இது வரை சுமாராக படித்தவர்கள் கூட நன்றாக படிக்க துவங்குவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.
பொருளாதாரம்: குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பீர்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவீர்கள். சிலருக்கு சுப பலன்களும் நடக்கும்.அதிர்ஷ்ட வசமாக வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம், கல்வி என சுப செலவுகள் ஏற்படலாம். விரய கேதுவினால் பெரிய சேமிப்போ லாபமோ எதிர்பார்க்க முடியாது. சிலர்வ ட்டிக்கு வட்டி கட்ட நேரும். ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும். சிலருக்கு பய உணர்வினால் நேரம், காலம், பொருள் விரயம் உண்டாகும். தன ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் பெரிய நஷ்டமோ, மிகுதியான அசுபமோ இருக்காது.
பெண்கள்: குடும்பத்தில் உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். ஒவ்வாமை ஏற்படும் என்பதால் வெளி உணவினை சாப்பிடாமல் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.தேவையற்ற பேச்சை குறைத்தாலே எந்த பாதிப்பும் வராது.
அறிமுகம் இல்லாத பழக்கம் இல்லாத நபர்களிடம் குடும்ப விபரங்களை பகிரக் கூடாது. விலையுயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க கூடாது. வாங்க கூடாது. உடன் பிறந்த மூத்த சகோதர, சகோதரிகளிடம் மனக்கசப்பு உண்டாகும். பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்.வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனமாக செயல்படவும்.காஞ்சி காமாட்சியை வழிபட தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள்; அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் நற்பெயரும், அங்கீகாரமும் கிடைக்காது. சிலர் சொற்ப சம்பளத்திற்காக குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில் வாழ நேரும். சிலர் வேலையை ராஜினாமா செய்ய நினைத்தால் கூட முடியாத வகையில் சூழ்நிலை அமையும். வேலையில் மற்றவர்களை குறை கூற வேண்டாம்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் இன்னல்களை கட்டுப்படுத்த முடியும்.சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும்.
முதலீட்டாளர்கள்: சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். தொழில் நடத்த தேவையான பொருளாதாரத்தை எப்படியாது திரட்டுவீர்கள். கூட்டம் கலை கட்டும். ஆனால் கல்லாவில் காசு இருக்காது. சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. தொழில் கூட்டாளிகளால் வம்பு வழக்கு வரலாம். அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிகுதியாக இருக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்: சனி செவ்வாய் சேர்க்கை.. ராசிக்கு ஏழாம் இடமான சம சப்தம ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. 5, 6ம் அதிபதி சனியும் 3,8ம் அதிபதி செவ்வாயும் சேர்க்கை பெறுவதால் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கவே செய்யும். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடக் கூடிய நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்தி உடல் தளர்ச்சியையும் மனபயத்தையும் மிகைப்படுத்துவார். அவ்வப்போது உடல் களைப்பால் அவதி அசவுகரியங்கள் ஏற்படும்.
சிலருக்கு கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். சிலருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வம்பு, வழக்கு வரலாம். சுய சிந்தனை மட்டுப்படும். வந்த வாக்கிலும் போன வாக்கிலும் வாழ்க்கையை வாழ்வார்கள்.வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வராது. பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். உயர்கல்வி முயற்சி தடை, தாமதத்திற்குப் பிறகு பலிதமாகும். தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து குலதெய்வத்தை வழிபட பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பிரதோச காலத்தில் பச்சரிசி மாவில் நந்திக்கு தீபம் ஏற்றி வழிபட கர்ம வினை தீரும். மன சஞ்சலம் நீங்கும்.
கலை ஆர்வம் நிறைந்த துலாம் ராசியினரே!
பிறக்கப் போகும் சித்திரை மாதத்தில் ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு சம சப்தமமான ஏழாம் இடத்தில் உச்ச சூரியனுடன் இணைந்து தன் வீட்டை தானே பார்க்கிறார்.ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிகும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள்.
உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அனுசரித்துச் செல்வீர்கள்.
மன நிம்மதி இருக்கும். வீட்டில் எல்லோரும் எப்போதும் சந்தோசமாக இருப்பார்கள். குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்ப சொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும்.
தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும்.சிலருக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். நட்பு வட்டாரங்களால் மன சங்கடம் உருவாகும். ஆறாம் அதிபதியாகிய குரு பாக்யாதிபதி புதனுடன்
பரிவர்த்தனை பெறுவதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. சில வளர்ச்சிகள் தடைபடலாம். ஆனால் குரு பார்வை பட்ட இடத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம்.
திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணமே வேண்டாம் என்றவர்கள் கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். திருமணத்திற்கு நல்ல அழகான வாழ்க்கைத் துணை அமையும். மாணவர்களுக்கு கற்றல் ஞானம் மிகுதியாகும்.உழைப்பிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். சில மாணவர்களுக்கு வேற்று மொழி கற்கும் வாய்ப்பும் ஆர்வமும் உண்டாகும். போட்டித் தேர்வில் பெற்றி பெற்று பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவார்கள்.
பொருளாதாரம்: பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. விரும்பிய கடன் தொகை எளிதில் கிடைக்கும்.ராசிக்கு குருப் பார்வை பதிவதால் வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும்.
பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.
பெண்கள்: மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். ஜனன கால ஜாதகப்படி தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு சிறு சிறு உடல் பாதிப்பு மனசஞ்சலம் இருக்கும். மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் தொடர்ந்து சுபநிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வருகையில் குதூகலம் நிரம்பியிருக்கும்.
மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். தாய்வழிப் பாட்டியின் நகைகள், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு வலுவாக இருக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும்.பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள்: அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இட மாற்றத்துடன் ஊதிய உயர்வும் கிடைக்கும்.தனியார் துறையினர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும்.
சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பணம் கொடுத்து ஏமாறலாம் . அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் ‘மெமோ’ வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும்.
முதலீட்டாளர்கள்: தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். பல புதிய தொழில் அதிபர்கள் உருவாகுவார்கள். சில உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களுக்கு டிரேட் மார்க் வாங்குவார்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவி கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.புதிய கூட்டாளியின் நாணயம் குறைவுபடும்.
அரசியல்வாதிகள்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். ஏழில் உள்ள சூரியன் பொது ஜனத் தொடர்பை அதிகப்படுத்துவார். மக்களுடன் மக்களாக கலந்து சேவை செய்வீர்கள். அரசியல்வாதி களுக்கு மிகப் பொன்னான காலம் . எதிரிகள் விலகுவார்கள். உங்களின் புகழ் பரவும். யாரும் உங்களை அசைக்க முடியாது. அரசியலில் சாதனை படைப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். கடன் வாங்கி அரசியலுக்காக செலவு செய்வதை தவிர்க்கவும். உங்களின் உழைப்பிற்கு அபரிமிதமான பலன் கிடைக்கும்.சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்: சனி செவ்வாய் சேர்க்கை ராசிக்கு ஆறாமிடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. கெட்டவன் கிட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். எனினும் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் வாழ்க்கைத் துணையால் பிரச்சனைகள் ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும். சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும். வேற்று மொழி, வேற்று மத நண்பர்கள் கிடைப்பார்கள்.
சிலருக்கு நண்பர்கள் பங்காளிகளுடன் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். உறவுகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சுமங்கலி பெண்களுக்கு உணவு உடை தானம் வழங்கவும். வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மல்லிகை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும்.
வீரம் மிகுந்த விருச்சக ராசியினரே!
விருச்சிக ராசிக்கு ராசி அதிபதி மற்றும் ஆறாம் அதிபதியான செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் சேர்க்கை பெறுகிறார். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுத் தரப் போகிறார். தொட்டது துலங்கும். எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகிறது. தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகப் போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப் போகிறது. இது வரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்களின் பெயர் புகழ் பரவும். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.
உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும்.ஆன்ம பலம் பெருகும். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். இதனால் மகிழ்ச்சி கடலில் நீந்தப் போகிறீர்கள். ஒளிமயமான எதிர்காலம் உங்களை வழிநடத்தப் போகிறது. எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும் பலிதமாகும்.
கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி பெறுவீர்கள். திறமைகளை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது. கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும். மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். குடும்ப உறுப்பினர்களிடம் சகஜ நிலை திரும்பும். உங்கள் குடும்ப நிலை உயரும்.
சிலருக்கு குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். குடும்ப உறவுகள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியப் பேச்சுக்கள் கைகூடும். குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது. பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும்.சிலர் தாத்தா, பாட்டியாகுவார்கள். பெண்கள் கருத்தரிப்பார்கள்.
உடல் பெருக்கம் ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும்.மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
பொருளாதாரம்: தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சனி மற்றும் குருவின் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் இணைந்து ராஜ யோகத்தை தரும். நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும்.
விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். இதுவரை பங்கு சந்தை பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட பங்கு வர்த்தகத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் உருவாகும்.சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வீடு வாகனத்தை வாங்குவார்கள்.
பெண்கள்: பெண்களுக்கு குடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு சிறப்பாக இருக்கும். அழகிய, ஆடம்பர விலையுயர்ந்த வெளிநாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள்.உங்களின் மேல் அக்கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும். சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலமாகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும்.
உத்தியோகஸ்தர்கள்: மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளால் பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டால் உழைப்பிற்கு மேல் இரண்டு மடங்கு வருமானம் உயரும்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். அதன் முலம் நல்ல வருவாயும் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். சம்பள உயர்வு கிடைக்கும். உபரி,தனி வருமானம்’ மகிழ்ச்சியைத் தரும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு காரிய சித்தி உண்டு. தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்: தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வீர்கள்.இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம்.
நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்.தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். எதிர்பாராத தன லாபம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்,வாங்கல் தொடர்பான விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அரசியல்வாதிகள்: 6ல் உச்ச சூரியன் நிற்பதால் அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து எதிரியை விரட்டுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள். நினைத்த சாதிக்க கூடிய பணபலம், படை பலம் பெருகும். புதனுடன் பரிவர்த்தனை பெற்ற ஐந்தாம் அதிபதி குருபகவான் பதவிக்கு, கவுரவத்திற்கு கவசமாக இருப்பார். தேர்தலில் செலவழித்த தொகை வீண் போகாது. கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவு பல மடங்காக அதிகரிக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்: சனி செவ்வாய் சேர்க்கை விருச்சிக ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 3,4ம் அதிபதியான சனி பகவானும் 1,6ம் அதிபதியான செவ்வாயும் சேர்க்கை பெறுகிறார்கள்.சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலர் பணியிலிருந்து ஓய்வு பெறலாம். பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள்.
சிலர் குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். சிலர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்க இயக்கத்தில் சேரலாம். சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லலாம். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரையச் செலவு அதிகமாகும். இடது கண்ணில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய நேரும்.பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்கவும். சிலர் வேற்று மதத்திற்கு மாறி விடுவார்கள். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து அந்தணர்களுக்கு தான தர்மம் வழங்க நிம்மதி கூடும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வழிபட கடன் தொல்லை கட்டுப்படும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406