வீரமான மேஷ ராசியினரே!
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பங்குனி 28 வரை ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. இதனால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். ராசியில் சூரியன் உச்சம் பெறுவதால் உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் அனுசரணை உண்டு. புத்திர பிராப்தம் உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.
திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.
கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். பாகப் பிரிவினையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வியாதிகளால் ஏற்பட்ட தாக்கம் குறையும். ஆயுள் பயம் அகலும். கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர சாதகமான காலமாகும். உங்கள் லட்சியத்தை அடைய நவகிரகங்கள் உதவும்.படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் அற்புதமான தமிழ் மாதமாக அமையப் போகின்றது.
பொருளாதாரம்: தன ஸ்தான அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பங்குச்சந்தை, பந்தய வெற்றி, எதிர்பாராத தொழில் லாபம் போன்றவற்றால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
கடன் தொகை எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து கிடைக்கும்.ஏராளமான செலவும் வரும். ராசி அதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் புதிய தொழில் ஒப்பந்தம், பணப்பரிவர்த்னை செய்வதை தவிர்க்கவும்.பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி சிந்தித்து செயல்பட்டால் விரயத்தை குறைக்க முடியும்.
பெண்கள்: லௌகீக வாழ்வின் அனைத்து இன்பங்களை யும் அனுபவிக்க தேவையான வசதி வாய்ப்புகளை 11ம்மிட ராகு கொடுப்பார். ராகு கொடுக்கும் பணவசதியை அனுபவிக்க விடாமல் தொழில் நிமித்தமாக தம்பதிகள் ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ வேண்டிய சூழலை 5ம்மிட கேது கொடுப்பார். வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும். பல புதிய பெண் தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள்.
குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாழ்க்கையில் செட்டிலாகும் காலம்.பூர்வீகச் சொத்து,தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். ஆரோக்கியம் சீராகும். கடன் சுமை குறையும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள்: ராசிக்கு 12ல் சனியின் சஞ்சாரம் இருப்பதால் உத்தியோகத்தில் இருந்த மன உளைச்சல் நீங்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும்.வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேலை நிரந்தமாகும்.
பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும். அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆனால் அதிகம் உழைத்து சிறிய பொருளை சம்பாதிக்க நேரும்.ஆனால் பண வரவில் தடை தாமதம் ஏற்படலாம் என்பதால் சம்பள விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள்: இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவர்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழிலை விரிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது.தொழில் தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
அரசியல்வாதிகள்: அதிகாரப் பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 5ல் கேது இருப்பதால் யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக் கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்தி விடலாம்.
எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரயம் தான். நம்பியவர்களே நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரலாம். உண்மையானவர்கள் யார் துரோகிகள் யார் என அடையலாம் காணும் காலம்.
கவனம் தேவை: சனி + செவ்வாய் சம்பந்தம். ராசிக்கு 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளதால் அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விரயம் உண்டாகும். அதிக அலைச்சல் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும்.
நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்மந்திகளிடம் நயந்து பேசவும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும் அல்லது தொழில், வேலைக்காக தம்பதிகள் ஓரிரு மாதம் பிரிந்து வாழலாம். சிலர் வேலை மாற்றம் செய்யலாம். அல்லது கொடுத்த பணியை திருப்திகரமாக முடிக்க முடியாது. ஒரு கடனை அடைக்க மறுகடன் பெறலாம்.
சுகவீனத்தால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள். அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள். ஏழரைச் சனியின் காலத்தில் செய்யாத குற்றத்திற்காக அனுபவித்து வரும் சிறை தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள்.காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து நீர் மோர் தானம் வழங்கவும். செவ்வாய்கிழமை வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபடவும்.
ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் மிகுந்த ரிஷப ராசியினரே!
உங்களின் ராசி அதிபதி சுக்ரன் சித்திரை 5 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார்.நினைப்பதை சாதிப்பீர்கள். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும். சேவை மனப்பான்மை மிகும். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள்.
உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும்.உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். கடந்த சில நாட்களாக அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள்.
சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். வாடகை வீட்டு தொல்லை அகலும். இதுவரை விற்காமல் கிடந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும்.
வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும்.
திருமண முயற்சிகள் பலிதமாகும். நல்ல வரன் கிடைக்கும். எந்த தடையும் இன்றி பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் நடைபெறும் நாள்பட்ட வியாதிகள் மறையும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.பயண அலைச்சலால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும்.கை, கால் மூட்டு வலி குறையும்.சில மாணவர்கள் உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அல்லது விடுதியில் தங்கி படிப்பார்கள்.
பொருளாதாரம்: தொட்டது துலங்கும். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். தன ஸ்தான குருவால் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். சென்ற மாதத்தை விட இந்த மாதம் உபரி வருமானம் கிடைக்கும்.
அரசின் மானியம் மற்றும் உதவி கிடைக்கும். விலை போகாது என்று முடிவு செய்த சரக்குகள் கூட விற்று பணம் வரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள்.
பெண்கள்: எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். . சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். பெண் தொழில் முனைவோர்களுக்கு மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம் , முன்னேற்றம் மன நிம்மதி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்: வேலை இல்லாதவர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும்.
முதலீட்டாளர்கள்: சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பு அடையும். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். தொழில் சிறப்பாக இருந்தாலும் ராசி அதிபதி சுக்கிரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது. சிலருக்கு அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். ராசி அதிபதி விரய ஸ்தானத்தை கடக்கும் வரை முதலீட்டாளர்கள் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு பெரிய பட்ஜெட் தொழிலில் ஈடுபட வேண்டும்.
அரசியல்வாதிகள்: எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை அடக்க முடியும் என்பதால் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உண்டு. பொது மக்களின் ஆதரவு, நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் உண்டு. நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் தன்னலமற்ற சேவை செய்வீர்கள்.
கட்சிக்காகவும், பொது மக்களுக்காவும் மிகுதியான பொருள் விரயத்தை சந்திப்பீர்கள் சிலர் முழு நேர அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு சேவை செய்வார்கள். கவனமாக செயல்பட வேண்டிய காலம் சனி + செவ்வாய் சேர்க்கை: ராசிக்கு 11ம் மிடமான லாப ஸ்தானத்தில் 7, 12ம் அதிபதி செவ்வாயும், 9,10ம் அதிபதி சனியும் சேர்க்கை பெறுகிறார்கள்.
இந்த சேர்க்கை உள்ளதால் சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள்.
சேமிப்புகள் கரையும்.வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன் மனகசப்பு உண்டாகும். தந்தை குடும்பத்தை பிரிந்து தூர தேசம் செல்லலாம்.சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோ பிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும். விரயங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும் வெள்ளிக்கிழமை மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
தனித்திறமைகள் நிறைந்த மிதுன ராசியினரே!
பிறக்கப் போகும் சித்தரை மாதத்தில் உங்களின் ராசி அதிபதி புதன் சித்திரை 17 வரை மீன ராசியில் நீச்சமாக இருக்கிறார்.குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார்.திட்டங்கள் தீட்டி புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.பிறருக்கு உதவி செய்து பாக்கிய பலனை அதிகரித்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். மனச் சங்கடங்கள் அகலும். துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாட்டின் மூலம் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.
உங்கள் முயற்சியல் சிறு தடை, தாமதம் நிலவினாலும் முடிவில் பெற்றி உங்களுக்கே உண்டாகும்.பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் கன்சல்டிங் நிறுவனம் நடத்துபவர்களுக்கு இது பொற்காலமாக அமையும். விலகிச் சென்ற உறவுகளை குருபகவான் மீட்டுத் தருவார். உறவுகள் பகை மறந்து ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள்.
உறவுகளிடம் கோள் மூட்டி வேடிக்கை பார்த்தவர்கள் விலகி ஓடுவார்கள்.உங்கள் வார்த்தைக்கு குடும்பம் கட்டுப்படும். குடும்ப முன்னேற்றத்திற்கான அனைத்து தேவைகளும் நிறைவாகும். பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி கிடைக்கும்.
புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும்.சிறு சிறு ஆரோக்கிய குறைபாடு வந்தாலும் உடனே சரியாகி விடும். போதிய ஓய்வு, நிறைந்த சந்தோஷம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். டென்ஷன் குறையும். ஜனன கால ஜாதக தசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு சித்திரையில் திருமணம் நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
குடும்பத்துடன் சென்று குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனை களை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த தடைகள் அகலும். மாணவர்களுக்குபோட்டித் தேர்வில் எதிர்பார்த்ததை விட பிரமாண்ட வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பும் கல்லூரிக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி பரிசு கிடைக்கும்.
பொருளாதாரம்: தன வரவில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இல்லை என்ற நிலை இல்லை. முன்பு இருந்ததை விட வருமான உயர்வு அதிகமாகவே இருக்கும். வட்டிக்கு வட்டி கட்டிய கடன் பிரச்சனைகள் குறையும்.ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை யால் ஆதாயம் உண்டு.
சொகுசு வாழ்க்கை வாழப் போகிறீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், ஆபரணங்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என விரும்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர, சகோதரி களால் சகாயங்கள் உண்டாகும்.தொழில், உத்தியோகம், திரு மணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும். பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் போட்டி போட்டு கவனிப்பார்கள்.
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். கணவரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகஸ்தர்கள்: மிதுன ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். உங்கள் முன்னேற்றம் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவார்கள். தலைக்கு வந்த பிரச்சனைகள், தலைப்பாகையோடு சென்று விடும் என்று உறுதியாக கூறலாம். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் சீராகும்.வெளிநாட்டு வேலைக்கு முயற்சி தற்போது பலிதமாகும். வேறு வேலைக்கு முயற்சி செய்யும் தனியார் துறை யினருக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். வேலை மாற்றம், ஊதிய உயர்வு, ஊர் மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றமும் உண்டாகும். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள்.
முதலீட்டாளர்கள்: 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். தற்போது 10ல் சனிபகவான் சஞ்சரிப்பதால் உங்கள் சிந்தனை முழுவதும் தொழில் பற்றியே இருக்கும்.தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட ஈகோ தணியும்.மன வலிமை அதிகரிக்கும். எதிர் நீச்சல் போட்டு உழைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள்.
இதுவரை ஒரு தொழிலில் செய்தவர்களுக்கு இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும். பாக்கிய ஸ்தான ராகுவால் தொழிலில் நிலவிய மந்த நிலை மாறி லாபம் உண்டாகும். சிலருக்கு தொழில் விரிவாக்க சிந்தனை தோன்றும்.வெற்றி மேல் வெற்றி உண்டாகும். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவர்கள்.
அரசியல்வாதிகள்: பதவி ஸ்தான அதிபதி சுக்ரன் தன் வீட்டை தானே உச்ச சூரியனுடன் இணைந்து பார்க்கிறார். பெயர், புகழ் உயரக்கூடிய காலம். மக்கள் சேவையே மகேசன் சேவை என பல மிதுன ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்து அரசியல் களத்தில் இறங்குவார்கள். அரசியலில் ஈடுபட்டோருக்கு ராஜ யோகம் தரும் காலமாகும். கட்சிக்காக அலைச்சல் மிகுந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.
புதிய மாற்றங்கள் உருவாகும். கடந்த காலங்களில் விதைத்த விதை தற்போது துளிர் விட ஆரம்பித்து விட்டது. மக்கள் மனதில் இடம் பிடித்து உங்கள் பெயர், அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். மிதுன ராசி அரசியல் பிரமுகர்கள் காட்டில் பண மழைதான். அற்புதமான நல்ல காலம். பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடிவரும். lபெயர், புகழ், செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். கவனமாக செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளது. தொழில் வளர்ச்சியால் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும்.
அதிக நேரம் உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் தலை தூக்கும். அதிர்ஷ்டம் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் சக பணியாளர் களிடம் சகிப்புத் தன்மையுடன் பழக வேண்டும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவும் அதிகரிக்கும்.தவ றான எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும்.
இரண்டாம் திருமணம் நடக்கும். செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகுவதை தவிர்க்க வும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். எதிர்பார்பார்ப்புகளில் தடை தாமதம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்கள் கை மாறிப் போகலாம். வழக்குகள் இழுபறியாகும்.தொழில் தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட நிம்மதி அதி கரிக்கும். புதன்கிழமை சயன கோலத்தில் உள்ள மகாவிஷ்ணு மற்றும் தாயாரை வழிபடவும்.
கடமை உணர்வு நிறைந்த கடக ராசியினரே!
பிறக்கப் போகும் சித்திரை மாதத்தில் தன ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். தொழிலால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும்.மனக் குழப்பம் நீங்கி தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள் மொத்தத்தில் ஆரவாரம் நிறைந்த சித்திரை மாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைவாற்றல் மேம்படும். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக் கொள்வீர்கள். எதையும் வரும் முன் அறிந்து செயல்படுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். தேவையான நிதி உதவிகளை வங்கியில் இருந்து பெறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சில மாதங்களில் நிகழப் போகும் குருப் பெயர்ச்சியால் நல்ல மாற்றங்கள் இப்பொழுதே தெரியத் துவங்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் அன்பில் ஆனந்தம் அடைவீர்கள். பிரிந்த குடும்ப உறவுகளின் வருகை ஆறுதலையும் நிம்மதியையும் தரும்.
விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். விவகாரத்து வழக்கு சாதகமாகும்.தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.தொழில் அலைச்சலால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது.வைத்தியத்தில் உடல் உபாதைகள் எளிதில் கட்டுப்படும்.
வழக்குகளில் சாதகமான தீர்ப்பும் கிடைக்கும்.பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும்.பல வருடங்களாக திருமணத் தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும்.சிலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும்.மாணவ , மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம்.
பொருளாதாரம்: 4ம்மிடமான சுக ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். எதிர்பாராத தனவரவு மாற்றம் மன மகிழ்வை தரும். கடன் பிரச்சனையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
கொடுக்கல் வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும். பணப் பற்றாக்குறைகள் அகலும். வங்கியில் உபரித் தொகை சேமிப்புத் தொகை உயரும். கரைந்த சேமிப்புகள் வளரும். அடமான நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். கடன் பெற்றாவது சொந்த வீடு வாகன யோகத்தை அடைவீர்கள்.
பெண்கள்: பெண்களுக்கு இந்த தமிழ் மாத பிறப்பு மகிழ்ச்சியை மிகைப்படுத்தி தரும்.குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாக்கு வன்மை பெறும். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.
குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரை யும் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைப்பேறு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.ஆரோக்கியம் சீராகும்.கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். உற்றார் உறவினர்களுடன் நிலவிய மன பேதங்கள் மறையும்.
தாய் வழிச் சொத்து கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வீட்டுக் கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அதிர்ஷ்டம், தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும்.கடன் சுமை குறையும். அனைத்து வகையிலும் திருப்புமுனையான மாதமாக அமையும்.
உத்தியோகஸ்தர்கள்: எதையும் தைரியமாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.உங்களது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். மன திருப்தி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.
நம்பியவர்களே துரோகம் செய்யலாம் என்பதால் அலுவலக நண்பர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும்.
முதலீட்டாளர்கள்: சுயதொழில் அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 10ல் சூரியன் இருப்பதால் நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தி தொழிலை வளர்க்க விரும்புவார்கள். சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்ரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்களுக்கு விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதம். எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். ராகு கேதுவின் சஞ்சாரம் சற்று சுமாராக இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய கருத்தை பேச வேண்டும். செயலில் விவேகம் மற்றும் நிதானத்தை கடைபிடிக்கவும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்: ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சனி 5,10ம் அதிபதியான செவ்வாயுடன் சேர்க்கை பெறுகிறார். தொழில் தொர்பான அனைத்து விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.எந்த ஒரு நிலையிலும் அவசரம் வேண்டாம். சிலர் மனக்குழப்பத்தால் முக்கிய பணியை திருப்திகரமாக செய்ய இயலாது.மனதின் வேகத்திற்கு ஏற்றவாறு செயல்களில் வேகம் இருக்காது.தேவையற்ற யோசனை களால் கவலைகள் அதிகமாகும்.
உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். அதிக மதிப்பு உள்ள சொத்தை குறைந்த விலைக்கு விற்கலாம்.அசையாச் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது. சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவார்கள்.
கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் அதிகரிக்கும். விளை நிலங்கள் தொடர்பான பங்காளி சண்டை பேச்சுவார்த்தை மூலமாக சரியாகும். பண்ணைத் தொழில் நடத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.உடன் பிறந்தவர்களின் அன்பு அனுசரனையும் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றி தீர்மானிப்பதில் குழப்பம் அதிகரிக்கும். சிலருக்கு புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை மாற்றம் கிடைக்கும். சிலரின் தந்தை தொழிலுக்காக தூர தேசம் செல்லலாம்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபடவும். திங்கட்கிழமை சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்..
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406