தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் விளங்கி வருகிறது.
இக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆனி மாதத்தில் நடைபெறும் பெருந்தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டு ஆனி தேரோட்ட திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தில் பங்கேற்க நெல்லை மட்டும் அல்லாது தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள்.
இதனையொட்டி அனைத்து விதமான ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. தேரோட்டத்திற்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் சுவாமி நெல்லையப்பர் தேரில் சாரல் அமைத்து 5 அடுக்கு தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் அலங்கார பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளது. பிரம்மா, 4 குதிரைகள், யாழிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு சாரம் அமைத்து தட்டுகள் பொருத்தப்பட்டு, தேர் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி டவுன் ரதவீதி, மவுண்ட் ரோடு, போஸ் மார்க்கெட், நயினார்குளம் ரோடு உள்ளிட்ட 11 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரதவீதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரதவீதிகளில் தேர் தடையின்றி செல்வதற்கு வசதியாக 4 ரதவீதிகளிலும் சாலைகளில் ஏற்பட்ட சிறு சிறு பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகையடி முக்கு, மவுண்ட் ரோடு, லாலா சத்திர முக்கு, பாரதியார் தெரு, சொக்கப்பனை முக்கு, டவுன் ஆர்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சேதம் அடைந்திருந்த தார்ச்சாலைகள் தற்காலிகமாக செப்பனிடப்பட்டுள்ளது.
அதேபோல் பக்தர்கள் கூட்ட நெரிசலின் போது சிக்கி மயக்கமடைதல் உள்ளிட்ட நிகழ்வுகள், அசவுகரியங்களை தடுக்கும் விதமாகவும், அவசர பாதுகாப்பு வசதிக்காகவும் கோவில் ரதவீதிகளில் 5 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் போலீசார் போத்தீஸ் கார்னர் பகுதியில் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரதவீதிகள் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் கட்டுப்பாட்டு அறையான டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தேரோட்ட நாளன்று ஏராளமானோர் தென்காசி, தூத்துக்குடியில் இருந்தும் கார், மோட்டார் சைக்கிள்களில் வருவார்கள் என்பதால் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி கார் உள்ளிட்டவை டவுன் சாப்டர் பள்ளி மைதானத்திலும், மோட்டார் சைக்கிள்கள் ஆர்ச் அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.