வழிபாடு

2026 ஆவணி மாத ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். எனவே இம்மாதம் ஒரு யோகமான மாதமாகும். நினைத்தது நடக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறும் சூழல் உருவாகும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். பொறுப்புகளும், புதிய பதவிகளும் தானாகவே தேடிவரும். மறுப்பு சொல்லி உங்களை விட்டு விலகியவர்கள் மறுபரிசீலனை செய்து உங்களோடு இணைய முன்வருவர். வியாபாரம் வெற்றிநடைபோடும்.

சிம்ம - புதன்

உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். தன லாபாதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். பணம் பலவழிகளில் வந்து பையை நிரப்பும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உடல்நலக் குறைபாடு அகலும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். என்றைக்கோ கொடுத்த கடன் இப்பொழுது வசூலாகும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள்.

துலாம்- சுக்ரன்

ஆவணி மாதம் 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும்போது வெற்றிச் செய்திகள் வீடு தேடிவரும். வழக்குகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கிய தொழிலை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு, பழைய தொழிலையே தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நட்பு பலப்படும். இதுவரை நீங்கள் எதிர்பார்த்திருந்த உயர்பதவி கிடைக்கும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். நடைபெறும் தொழிலை இடமாற்றம் செய்யலாமா? அல்லது வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் நமக்கு வருமா? என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு, அதற்கான பதில் கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாக வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு கனவு நனவாகும். மாணவ மாணவிகளுக்கு பாராட்டும், புகழும் கூடும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் குருவோடு கூடி சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இடம்பெறும் விதத்தில் சாதனைபுரிவீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் வருவதை நழுவவிட மாட்டீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வெளிநாட்டுப் பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும். பொதுவாழ்வில் பொறுப்புகள் மாறி மகிழ்ச்சி தரும்.

சிம்ம - புதன்

உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். இதன் விளைவாக விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வந்துசேரும். சூரியனோடு புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாகத் தொழில் செய்யலாமா? என்று சிந்திக்கும் நேரம் இது. அதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். மனச்சோர்வு ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். பயணங்கள் அதிகரிக்கும் நேரம் இது. ஆரோக்கியத்திலும் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். 'குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துச் செலவு ஏற்படுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள்.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியான அவர், தன ஸ்தானத்திற்கே வருவது அற்புதமான நேரம்தான். வருமானம் அதிகரிக்கும். வளர்ச்சி கூடும். எதிர் காலத்தைப் பற்றிய பயம் அகலும். நினைத்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். தொழில் வெற்றிநடைபோடும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்ல சந்தர்ப்பங்கள் நாளும் வந்து கொண்டேயிருக்கும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது, வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். தற்போது பார்க்கும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். மொத்தத்தில் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நேரம் இது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரும். மாணவ - மாணவியருக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. வருமானப் பற்றாக்குறை அகலும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது. இருப்பினும் குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் அவ்வப்போது வருமானமும் வந்து கொண்டேயிருக்கும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். புதிய திருப்பங்களும் ஏற்படும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவர்.

சிம்ம - புதன்

உங்கள் ராசிக்கு 9. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். விரயாதிபதியான புதன் லாப ஸ்தானத்திற்கு வருவதால் விரயத்திற்கேற்ற லாபம் வந்துசேரும். எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும், 'பணம் இல்லையே' என்று கவலைப்படத் தேவையில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் அதற்குரிய தொகை எப்படியும் உங்கள் கரங்களுக்கு வந்துவிடும். வீட்டைப் புதுப்பிக்கும் பணியை தொடர்வீர்கள். சொத்து விற்பனையில் கிடைத்த லாபத்தை, புதிய தொழிலுக்கான முதலீடாக பயன்படுத்துவீர்கள். இதுவரை உங்களிடம் பாசம் காட்டாத பெற்றோர். இப்பொழுது பாசம் காட்டுவர். கொடுக்கல் வாங்கல் ஆதாயம் தரும். 'கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி, தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியம் அளிக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.

துலாம்- சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன். துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கும். 8-ம் இடத்திற்கும் அதிபதியான சுக்ரன். உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகமான நேரம்தான். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன் சுமை பாதிக்கு மேல் குறைந்து கவலைகள் தீரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த நெருக்கடி நிலை மாறும். 'வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, மித மிஞ்சிய பொருளாதாரம் அமைந்து மகிழ்ச்சி அடைவர். திருமணத் தடை அகலும். விட்டுப்போன வரன் மீண்டும் வந்து முடிவாகலாம். சேமிப்பு அதிகரிக்க வழிபிறக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ -மாணவியருக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்ட மத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே பணவரவு திருப்தி தரும். இடம், பூமியால் லாபம் உண்டு. எதையும் திட்டமிட்டபடி செய்து வெற்றி காண்பீர்கள். குரு பகவான் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், வெற்றிச் செய்திகள் அடுக்கடுக்காக வந்துசேரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 6-க்கு அதிபதியான செவ்வாய் 8-ல் இருப்பதால் 'விபரீத ராஜயோக' அடிப்படையில், திட்டமிடாமல் செய்யும் காரியம் கூட வெற்றிபெறும்.

சிம்ம - புதன்

உங்கள் ராசிக்கு 8, 11, ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். லாபாதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்துவீர்கள். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அஷ்டமாதிபதியாகவும் புதன் இருப்பதால் இடமாற்றம். வீடு மாற்றம். தொழில் மாற்றம் ஏற்படலாம். வரன்கள் வாசல் தேடி வந்துசேரும். பிள்ளைகளின் மணவிழாக்கள், பெற்றோரின் மணிவிழாக்கள், உடன்பிறப்புகளின் வழியில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேகத்தோடும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன். துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 12-ல் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. என்றைக்கோ வாங்கிப் போட்ட இடத்தில் 'இன்னும் வீடுகட்ட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு. இப்பொழுது வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்கான முயற்சி கைகூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக அலைச்சலை மேற்கொள்ளும் பொழுது, உணவிலும் கட்டுப்பாடு செலுத்துவது அவசியம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ-மாணவியருக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.