பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. எனவே தொழில் வெற்றி நடைபோடும். பரபரப்பாக செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது.
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகிறது. அங்குள்ள சூரியனோடு இணையும் புதன், 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு உருவாகும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பாகப்பிரிவினை சுமுகமாக நடைபெறும். கல்வி மற்றும் கலைக்காக எடுத்த முயற்சி கைகூடும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். மேலும் உயரதிகாரிகள் உங்களுக்கு கேட்ட சலுகைகளை வழங்க முன்வருவர்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன். துலாம் ராசிக்குச் செல்கிறார். 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மாதத்தின் முதல் பகுதியில் நீச்சம் பெற்று, பின்னர் சொந்த வீட்டிற்கு வருகிறார். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரனால், எதிர்பாராத வரவு உண்டு. தொழில் ரீதியாக லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. கல்யாணக் கனவு நனவாகும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. பொதுவாக சுக்ர பலம் நன்றாக இருப்பதால் அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். வெளிநாட்டில் குடியுரிமை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு. அதற்கான வாய்ப்பு உருவாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ -மாணவியர், ஆசிரியரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு வருமானத்தை விட செலவு கூடுதலாக இருக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.
பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதோடு இந்த மாதம் சொந்த வீட்டிற்கு வந்து வலுவடையவும் செய்கிறார். எனவே மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மகத்தான காரியங்கள் பலவும் செய்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். மாதத்தின் முற்பகுதியில் கூடுதல் கவனம் தேவை. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளால் குழப்பத்தில் இருந்து விடுபட இயலும்.
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். இதன் விளைவாக நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுவதால் பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பார்த்த உத்தியோகம் அமையலாம்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் 6-ம் இடத் திற்கே வரும்பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் வேண்டிய சலுகைகளும் கிடைக்கும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் பிரச்சினை இல்லாமல் வந்துசேரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பாராட்டும், புகழும் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும். கலைஞர்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவ - மாணவியருக்கு கல்வி விருத்தி ஏற்படும். பெண்களுக்கு இல்லத்தில் நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். திருமண முயற்சி கைகூடும்.
பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். மேலும் தொழில் ஸ்தானாதிபதியான குரு உச்சம் பெற்று புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் இதுவரை இல்லாத அளவிற்கு லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நாடு மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் நன்மை தரும் விதம் அமையும்.
ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல காரியங்கள் நிறைய நடைபெறும். குறிப்பாக ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் கிடைக்கும். வீடு கட்டுவது அல்லது வாங்குவது பற்றிய சிந்தனை வெற்றிபெறும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய சில சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். அதே சமயம் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். என்றாலும் அதைத் தக்க வைத்துக் கொள்வது அரிது. உறவினர் பகையை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் நேரத்தில், பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பூர்வீகச் சொத்துகளை விற்று, புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதியவர்களின் தொடர்பால் பொருளாதார நிலையைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல திகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவியருக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்படும். பெண்களுக்குப் பொருளாதாரத்தில் நிறைவு கிடைக்கும். புகழ் கூடும்.
பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குருவும், அவரோடு புதனும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றனர். குருவின் பலத்தால் நினைத்த காரியம் நிறைவேறும். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். செல்வச் செழிப்பும், சிறப்பான வாழ்க்கையும் அமையும். கல்வி விருத்தி, கடமையில் வெற்றி உண்டு. புதிய திருப்பங்கள் பலவும் காணும் மாதம் இது. குரு பார்வை பலனால் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். குல தெய்வ வழிபாடும். இஷ்ட தெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும், குறுக்கீடு சக்திகளை அகற்றும்.
ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு புதன் வருவதால் தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. விரயாதிபதியாகவும் புதன் இருப்பதால் பணம் வந்த மறுநிமிடமே செலவாகும். 'சேமிக்க இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் பணத்தை வைத்துக் கொண்டு செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் பணப் புழக்கம் தானாக வந்துசேரும். ‘புத ஆதித்ய யோகம்' செயல்படும் நேரம் இது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்- வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். இதுவரை நீச்சம் பெற்றிருந்த சுக்ரன் இப்பொழுது பலம்பெறுகிறார். உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன்சுமை பாதிக்குமேல் குறையும். கட்டிடம் கட்டிக் குடியேற வேண்டுமென்று கற்பனை செய்து வைத்திருந்த உங்களின் கனவுகள் நனவாகும். நம்பிக்கையும், நாணயமும் கொண்ட நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்ந்த நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். மாணவ -மாணவியருக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சியைத் தரும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.