வழிபாடு

முன்னோர் சாபம் நீக்கி மகிழ்ச்சி தேடித் தரும் ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு உகந்த இந்நாளில் முருகனை வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

ஆன்மீகம்

ஆடி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு, குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற மாதமாகும். அம்மன் வழிபாட்டுடன் முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள ஏற்ற மாதம் என்பதால் இது தெய்வீக அருளுடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்று, பல விதமான தோஷங்கள், துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற மாதமாகவும் கருதப்படுகிறது.

அம்மன் கோவில்களில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மற்றும் ஆடி ஞாயிறு போன்ற நாட்களில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமையை போல் செவ்வாய் கிழமையும் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாகும்.

துர்க்கை

செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்சினை, துன்பமாக இருந்தாலும் தீர்ந்து விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை தீர்க்கும் சக்தி படைத்ததாகும். இந்த நாட்களில் அம்மனை விளக்கேற்றி, வழிபடுவதால் அம்மனின் அருள் கிடைக்கும். செவ்வாய் கிழமை என்பது நவ கோள்களில் “செவ்வாய்” கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும்.

வீடு, நிலம், சொத்து, கடன் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக செவ்வாய் பகவான் உள்ளார். அதே போல் கடன், ரத்தம் தொடர்பான நோய்களுக்கும் காரணமானவராக இவரே இருப்பதாக சொல்லப்படுகிறது.

முருகப்பெருமான்

செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு உகந்த இந்நாளில் முருகனை வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அதிலும் ஆடி செவ்வாய் என்றால் அம்மனுக்கும், முருகனுக்கும் ஏற்ற நாளாகும். ஆடி செவ்வாயில் முருகனையும், அம்பாளையும் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டினால் வீட்டில் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.

வளர்பிறை அஷ்டமி

ஆடி மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களுமே மகத்துவம் வாய்ந்தவை. ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். நாளை ஆடி மாத செவ்வாய்க்கிழமையும், வளர்பிறை அஷ்டமி திதியும் இணைந்து வருவது சிறப்பாகும். நாளை அம்மன், முருகப்பெருமான் மற்றும் பைரவரை வழிபட மிகவும் உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, செல்வம் பெருகும், கடன் தீரும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

பைரவர்

சிவாலயத்துக்கு சென்று கால பைரவரை வணங்குவதன் மூலம் நமக்கு இருக்கும் பண கஷ்டம், மகிழ்ச்சியின்மை போன்றவை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி அன்று பெண்கள் அதி காலையிலே எழுந்து குளித்து பூஜை அறையில் அம்மனை நினைத்து ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பின், பைரவர் படத்திற்கு ஒரு அகல் விளக்கு ஏற்றி செவ்வரளி பூ வைக்க வேண்டும். நைய்வேத்தியமாக செவ் வாழைபழம் வைத்து மற்றும் தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.

கோவிலுக்கு போகும்போது சிவப்பு நிற மலர்களான செம்பருத்தி, செவ்வரளி, ரோஜா மற்றும் அபிஷே கத்திற்கு மஞ்சள், குங்குமம், பைரவருக்கு சிகப்பு நிற துணி போன்றவற்றை வாங்கி செல்லவேண்டும்.

சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள கால பைரவற்கு, 108 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது 8 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அர்ச்சனை செய்து 8 அஷ்டலட்சுமியின் பெயரினை சொல்லி வழிபட வேண்டும்.

அடுத்ததாக, முதலில் 2 புதிய அகல் விளக்கை எடுத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரிநூல் போட்டு விளக்கு ஏற்றுங்கள் அல்லது இஞ்சி தீபம் அல்லது சுக்கு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். சிறிய துண்டு இஞ் சியை துருவி எடுத்து செல் லுங்கள். அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு அதில் கொஞ்சம் துருவிய இஞ்சியை சேர்த்து விளக்கு ஏற்றுங்கள்.

தீபம்

இந்த 3 தீபங்களில் உங்களுக்கு விருப்பமான தீபத்தை ஏற்றி கால பைரவரை நினைத்து வழிபடும் போது உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இந்த ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி அன்று உங்கள் கஷ்டங்களை கூறி வழிபடாமல் அதற்கு மாறாக உங்களுக்கு செல்வம் செழிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் போன்றவற்றை கூறி வழிபடுங்கள். ஏனென்றால் தேய்பிறை அஷ்டமி அன்று தான் நம் கஷ்டங்களை கூறி வழிபட வேண்டும். வளர்பிறை அஷ்டமி அன்று நமக்கு என்ன தேவையோ அதனை கூறி வழிபட வேண்டும்.வளர்பிரை அஷ்டமியில் காலையில் அம்மன் அல்லது முருகப்பெருமானை செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சுமங்கலிப் பெண்கள் கணவரின் ஆயுள் நீடிக்க அவ்வையார் விரதம் இருப்பதும் வழக்கம்.

ஆடி வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவதால் சூரிய – சந்திர கிரகங்கள் மற்றும் ராகு – கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். துஷ்டசக்திகள் நீங்கும். நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஒழியும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது குறைந்து செல்வ சேர்க்கை அதிகரிக்கும். பித்ரு சாபங்கள், குல சாபங்கள் போன்றவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை ஏற்படாமல் காக்கும்.