வழிபாடு

தாராசுரம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆணி தீமிதி திருவிழா

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள்.

ஆடி மாதம்

தமிழர்களின் வாழ்வோடும் வளத்தோடும் பெருந்தொடர்பு கொண்டவை இந்து சமய வழிபாடுகள். வழிபாடுகளில், ஓரிரு நாட்கள் மட்டுமே அனுசரிக்கப்படும் விசேஷங்கள் அதிகம் உண்டு. ஆனால், ஒரு மாதம் முழுவதும் பெண்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் விசேஷம் என்றால் அது ஆடி மாத அம்மன் வழிபாடு மட்டும்தான்.

அம்மன் கோவில்

ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடிப் புண்ணியமும், கோலாகல வாழ்க்கையும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள்.

சுவாமிமலை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

அக்னி ஆணி தீமிதி திருவிழா

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடி திருவிழாைவயொட்டி அக்னி ஆணி தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலின் முன்பு பூக்குழி அமைப்பதற்காக இருபுறமும் தீ வளர்க்கப்பட்டு, நடுவில் பல ஆயிரம் கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டது.

சூடேற்றப்பட்ட ஆணி மீது நடந்து...

21 அடி நீளம் உள்ள ஆணிகள் சூடேற்றப்பட்ட பிறகு அரசலாற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், வேல், திரிசூலம் மற்றும் வீரவாள்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வேண்டுதல்

பின்னர், அக்னிக்கு நடுவில் அமைக்கப்பட்ட ஆணியின் மீது நடந்து சென்று, தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். முதலில் சுவாமி கரகம் தீமிதித்ததை தொடர்ந்து, ஏராளமான பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனையுடன் கூர்மையான சூடான ஆணி தீமிதியில் நடந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

பக்தர்கள் தரிசனம்

இந்த நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழாவை காண கும்பகோணம், தாராசுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டு சென்றனர்.