வழிபாடு

குமரி மாவட்ட அம்மன் ஆலயங்களில் அதிகளவில் திரண்ட பெண் பக்தர்கள்

பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றதோடு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆடி மாதம்

தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதம்.

இந்த மாதத்தில் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் கடந்த 3 வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தர்கள் திரண்டனர்.

அம்மன் கோவில்

ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், விசேஷ வழிபாடுகளும் நடைபெற்றன. கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் மற்ற நாட்களைவிட இன்று அம்மன் கோவில்களில் பெண் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

அபிஷேகம்

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

பக்தர்கள்

காலையிலேயே கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். குறிப்பாக பெண் பக்தர்கள் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இசக்கியம்மன்

இதேபோல் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்ததையடுத்து, அங்கு பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் அமைந்துள்ள முக்கிய அம்மன் கோவில்களிலும் இன்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.​நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.​

வேட்டாளி அம்மன் கோவில்

வேட்டாளி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நாகர்கோவில் நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றதோடு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பகவதி அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.

வழிபாடு

நகர பகுதிகள் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் உள்ள அம்மன் கோவில்களிலும் கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கிராம மக்கள் இணைந்து அம்மனுக்கு படைத்து கூழ் ஊற்றும் பாரம்பரிய வழிபாடு விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் திரளான கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

ஆடி செவ்வாய்க்கிழமை

ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால், மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்கள் திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டன. ஆடிப்பூரவிழா வருகிற வெள்ளிக்கிழமை வருகிறது. இதையொட்டி அன்றைய தினம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.