வழிபாடு

அற்புத பலன் தரும் ஆடி வழிபாடு

ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல், விளக்கு பூஜைகள், பூக்குழி இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.

சூரியன்

ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் தொடங்குகிறது. உலக உயிர்கள் அனைத்தையும் காத்து அருள்புரியும் சூரியன், கடக ராசியில் சஞ்சரித்து தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார்.

கடக ராசி

எனவேதான் இதை `கற்கடக’ மாதம் என்றும் குறிப்பிடுகிறோம். கடக ராசி சந்திரனுக்கு உரியது. சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் ஒன்றுசேர்ந்து கற்கடகத்தில் சஞ்சரிக்கும்போது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. ஆடி மாதத்தில் சிவபெருமானே சக்தியின் அம்சத்துக்குள் அடங்கிவிடுகிறார் என்பது ஐதீகம்.

ஆடி மாதம்

எனவேதான், ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது. ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தேவர்களின் இரவு நேரம் என்பது ஆன்மிக நம்பிக்கை. இந்தப் புண்ணிய காலத்தில் சூட்சம சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நேரத்தில் பூஜைகள், ஜபங்கள், நீத்தார் வழிபாடு ஆகியவற்றைச் செய்தால் அதிக அளவு பலன்கிடைக்கும்.

மழைக்காலம்

மேலும், மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல்

ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல், விளக்கு பூஜைகள், பூக்குழி இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. ஆடிப் பூரம், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய் என்று இந்த மாதம் முழுவதும் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை.

உக்கிரமான தெய்வங்களை வணங்குவோம்

ஆடி மாதத்தில் வணங்குவது உக்கிரமான தெய்வத்தை வணங்குவது வாழ்வில் பலம் சேர்க்கும். அன்னையின் உக்கிரம் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கும். நெல்லையில் தீப்பாய்ச்சி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தில் குடும்பமாக வந்து தரிசித்துச் செல்வார்கள் மக்கள்.

தஞ்சாவூர் கோவில்

தஞ்சாவூரில் நிசும்பசூதனி கோவில் உள்ளது. சோழர்களின் காவல் தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாக திகழ்ந்தவள் நிசும்பசூதனி. உக்கிரமான தெய்வம். ஆடி மாதத்திலும் ஆடிப்பெருக்கு நாளிலும் அன்னையை வணங்குவதும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதன் மூலம் கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

குழுமாயி அம்மன் கோவில்

திருச்சி உறையூர் பகுதியை அடுத்து குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்தத் தலத்து நாயகியும் உக்கிரமான தெய்வம்தான். இவளை ஆடி மாதத்தை நினைத்து, விளக்கேற்றி வைத்து வீட்டில் இருந்தபடியே கண்கள் மூடி வேண்டிக்கொண்டாலே போதும், துஷ்ட சக்திகளும் எதிர்மறை எண்ணங்களும் நம்மை விட்டும் நம் இல்லத்தை விட்டும் ஓடியே போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.