மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கருப்பசாமி கோவிலில் புரட்டாசி பொங்கல் சிலை எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற சிலைகளை தலைச் சுமையாக சுமந்து ஊர்வலமாக சென்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறினால், அதனை களிமண் சிலையாக வடித்து கோவிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதற்காக ஆடிப்பெருக்கு முதல் வாகைகுளம் கண்மாயில் உள்ள களிமண்ணை கொண்டு சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெறும்.
முதல் நாளில் பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்தனர். மறுநாள் காலை உறவினர்களுக்கு கறி விருந்து நடந்தது. மதியம் 3 மணிக்கு மேல் ஊரின் மையப்பகுதியில் இருந்து சிலை எடுப்பு ஊர்வலம் தொடங்கியது. வாணவேடிக்கைகள், மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் முதலில் அம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வலம் வந்து, பின்னர் அய்யனார் பாலம் பகுதிக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த ஆண்டு மழைக்காலம் என்பதால் வயல்வெளிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருந்தது. பாதைகள் இல்லாததால் பக்தர்கள் வயல் வெளியிலேயே சேற்றில் நடந்து சிரமத்துடன் சிலைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வந்திருந்ததாக விழா குழுவினர் தெரிவித்தனர். பக்தர்கள் தாங்கள் வேண்டிய ஆசிரியர், டாக்டர், ஐ.ஏ.எஸ் அதிகாரி, கலெக்டர், ராணுவ வீரர், போலீஸ், விவசாயி, டிராக்டர், வீடு, பசுமாடு, ஆடு, குழந்தை வரம் வேண்டி குழந்தை சிலை, உடல் வலி தீர கை, கால் சிலை என தங்கள் விருப்பங்களை சிலைகளாக வடித்திருந்தனர்.
இத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் இது ஏற்றத்தாழ்வு இல்லாத, அனைத்து சமூகத்தினரும் ஒன்று கூடும் திருவிழா என பெருமையுடன் தெரிவித்தனர்.