பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்தில் உச்சம் பெற்ற புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே 'புத ஆதித்ய யோகம்' செயல்படுகிறது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆலய வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சகாய ஸ்தானத்தில் சுக்ரன் சொந்த வீட்டில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். உச்சம் பெற்ற குரு 12-ம் இடத்தில் இருக்கிறார். அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். நவக்கிரகங்களில் மூன்று கிரகங்கள் வலுப்பெறுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதம் பிறப்பதால் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். அவர் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் ஆவார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இதனால் பெற்றோரின் ஆதரவு குறையும். ஏற்கனவே வாங்கிப் போட்டிருந்த இடம், பூமியை விற்க நேரிடலாம். பாகப்பிரிவினை இழுபறியாக அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். போட்டிக் கடை வைப்போரின் எண்ணிக்கை கூடும். புதிய முயற்சிகளில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பொருளாதாரப் பற்றாக்குறையை நிறைவு செய்ய கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உறவினர் பகை உருவாகா மல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம்.
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். தன - லாபாதிபதியான புதன், அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இதன்விளைவாக உடன்பிறப்புகளுக்குத் திருமண வாய்ப்பு கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். வீடு கட்டுவது, புதிய தொழில் தொடங்குவது போன்ற திட்டங்கள் நிறைவேற வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். மேலதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு.
இந்த மாதம் முழுவதும் மீன ராசியில் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்துச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். அலைச்சல் குறையும். ஆதாயம் கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஆதாயம் தரும் விதம் அமையும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். கடமையைச் செவ்வனே செய்து வெற்றி காண்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குத் தாமதப்பட்ட பணி தடையின்றி நடைபெறும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் இருந்த குழப்பம் அகலும். பெண்களுக்கு விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கும் சூழ்நிலை உண்டு. பொது நலத்தில் உள்ள பெண்களுக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.
பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி சூரியனும் இணைந்திருக்கிறார். எனவே குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் வாங்கலில் விரயங்கள் ஏற்படலாம். சனி வக்ரம் பெற்றிருப்பதால், மாற்று மருத்துவத்தால் மட்டுமே உடல்நலம் சீராகும். 10-ம் இடத்தில் உள்ள செவ்வாய், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தன ஸ்தானத்தில் சுக்ரன், தனது சொந்த வீட்டில் இருக்கிறார். எனவே இந்த மாதம் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். சனி பகவான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள்.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது நன்மைதான். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கலாம். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தேக நலன் சீராகி தெளிவு பிறக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். ஊர் மாற்றம், இடமாற்றம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். வியாபார விருத்தியை முன்னிட்டு புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பர். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி கூடும். இக்காலத்தில் அங்காரகன் வழிபாட்டை மேற்கொண்டால் நல்லது நடக்கும்.
புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்லும் புதன், அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக நல்ல சந்தர்ப்பங் கள் உங்களைத் தேடிவரப்போகிறது. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வருமானம் இருமடங்காக உயரும். திருமணம் கைகூடும். தேடி செல்வத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். தாய், தந்தை உறவு திருப்தி தரும். பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைப்பதை முன்னிட்டு, புதிய வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பயணம் அதிகரிக்கும். ஆன்மிகப் பயணம், வெளிநாட்டுப் பயணம் பற்றிச் சிந்தித்த உங்களுக்கு, அந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் போட்டிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசே ரும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு மட்டுமல்லாமல் சம்பள உயர்வு உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், மீனத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதேநேரம் அவர் கண்டகச் சனியாக இருப்பதால் வக்ரம் பெறுவது நன்மைதான். இதுவரை தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். தன்னிச்சையாக இயங்க வேண்டும் என்று எடுத்த முடிவு வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டியாளர்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கலைஞர்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் செயலைக் கண்டு வியப்பார்கள்.
பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். 10-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணக்கவலை தீரும். மனக்குழப்பம் மாறும். எடுத்த முயற்சி வெற்றிதரும். மனதளவில் செய்ய நினைத்த காரியத்தை மறுகணமே செய்துமுடிப்பீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். தங்கு தடைகள் தானாக விலகும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். ஒருசிலருக்கு இலாகா மாற்றங்கள் வரலாம். விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் உறவினர் வழியில் விரயம் உண்டு.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். வருங்காலத்தைப் பற்றிய பயம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிக்கனம் தேவை. வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச்செல்வது நல்லது. உடல்நலத்திலும் கவனம் தேவை. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். மனக்கவலை அகல குலதெய்வ வழிபாடு கைகொடுக்கும். புதிய கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. எதிர்மறை சிந்தனைகள் மேலோங்கும் நேரம் இது. இடம், பூமி விற்பனையால் பிரச்சினைகள் வரலாம். பொதுவாக தைரியக்காரகன் செவ்வாய் வலிமை இழந்திருக்கும் இந்த நேரத்தில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவதே நல்லது.
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். விரயாதிபதி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வீண் விரயங்கள் ஆகாமல் சுபவிரயங்களாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்தி சாலித்தனமாகும். கல்வி, கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடன் சுமை குறையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அறிவும், திறமையும், அதிர்ஷ்டமும் பளிச்சிடும் நேரம் இது. ஆற்றல்மிக்கவர்கள் அருகில் இருந்து ஒத்துழைப்பு தருவர். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும்.
மீனத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான். வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். மதிப்பும், மரியாதையையும் தக்கவைத்துக்கொள்வது உத்தமம். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தடை ஏற்படலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செயல்திறன் மேம்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி பல மடங்காக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக சூழ்நிலை உற்சாகம் தரும். கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மாணவ -மாணவிகளுக்கு ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு மனச்சுமை குறையும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் அதன் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். மனக்குழப்பம் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். மாதத்தின் முதல் வாரத்திலேயே செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு வந்து உச்சம்பெற்ற குருவோடு இணைந்து 'குரு - மங்கள யோகம்' உருவாகிறது. எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம் இது.
புரட்டாசி மாதம் 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதி நீச்சம் பெற்றாலும் உச்சம் பெற்ற குருவோடு இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றி பெற்றவர்களின் வரிசையில் முதலில் நிற் பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு பெருமை சேர்க்கும். கல்யாணக் கனவு நனவாகும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாக இருக்கும். வாகன யோகம் உண்டு. பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். விலகிய சொந்தங்கள் விரும்பி வந்துசேருவர். ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டு முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தென்படும்.
புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்லும் புதன், அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். 8-க்கு அதிபதியான புதன், 12-ல் சஞ்சரிக் கும்போது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாத காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமை பளிச்சிடும். திடீர் பயணங்களால் திரவிய லாபம் கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும், அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. அவர்களின் படிப்பிற்கேற்ற வேலை, சுயதொழில் தொடங்கும் முயற்சி, வெளிநாட்டு உத்தியோகம் போன்றவற்றில் காட்டிய ஆர்வம் பலன்தரும். பொருளாதார நிலை உச்சம்பெறும்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், மீனத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். வக்ரம் பெற்ற சனியை குரு பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். கல்யாணம் ஆகாத பிள்ளைகளுக்கு மாலை சூடும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைக்கு இப்பொழுது வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு மகிழ்ச்சியைத் தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும்.