ஆன்மிகம்

முருகன் ஏன் தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறார்?

முருகப்பெருமானின் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே அமைந்துள்ளன.

சங்க இலக்கியமான 'திருமுருகாற்றுப்படை' முருகனை தமிழ் நிலத்தின் அரசனாகவே கொண்டாடுகிறது.

உலகில் தோன்றிய மூத்த மொழியான தமிழுக்கும், தமிழ்க் கடவுளான முருகனுக்கும் இடையேயான உறவு, உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவைப் போன்றது. 'முருகு' என்றால் அழகு, இளமை, மணம் என்று பொருள். இந்த மூன்று பண்புகளையும் உள்ளடக்கிய தமிழ் மொழியின் அடையாளமாகத் திகழும் முருகப்பெருமான், ஏன் 'தமிழ்க்கடவுள்' என்று உலகத் தமிழர்களால் போற்றப்படுகிறார் என்பதற்கான ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பின்னணிகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

முத்தமிழும் முருகனும்

முருகன் வெறும் கடவுள் மட்டுமல்ல. அவர் தமிழின் இலக்கண வடிவம். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழால் போற்றப்படுபவர். அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணத்தை உபதேசித்த குருவாகவும், சங்கப் பலகையில் அமர்ந்து தமிழை ஆய்வு செய்த புலவராகவும் முருகன் போற்றப்படுகிறார். தமிழ் என்ற சொல் எப்படி மூன்று எழுத்துகளால் உருவானதோ, அதேபோல் 'மு-ரு-க' என்ற மூன்று எழுத்துகளின் சேர்க்கையும் தமிழின் இனிமையை முழுமையாக வெளிப்படுத்துகிறது.

குறிஞ்சி நிலத் தலைவன்

பண்டையத் தமிழர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்து வழிபட்டனர். அதில் மலை சார்ந்த 'குறிஞ்சி' நிலத்தின் அதிபதியாக முருகனை (சேயோன்) வழிபட்டனர். இதுவே தமிழர்களின் மிகத் தொன்மையான வழிபாடாகும். 'சேயோன் மேய மைவரை உலகம்' என தொல்காப்பியம் குறிப்பிடுவது முருகனின் தொன்மையை பறைசாற்றுகிறது.

பெயரில் மறைந்துள்ள தமிழ் ரகசியம்

முருகன் என்ற சொல்லின் எழுத்துகள் ஆழமான தத்துவத்தைக் கொண்டவை.

மு - மெல்லினம் (மென்மையான ஓசை)

ரு - இடையினம் (வலிமைக்கும் மென் மைக்கும் இடைப்பட்ட

ஓசை)

க - வல்லினம் (வலிமையான ஓசை)

இந்த மூன்று இன எழுத்துகளும் சேர்ந்து உருவான பெயரே 'முருகன்'. தமிழ் மொழியின் ஒட்டுமொத்த ஒலி வடிவமே அவர் பெயரில் அடங்கியுள்ளது.

ஆறுபடை வீடுகளும் தமிழ் மண்ணும்

முருகப்பெருமானின் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் முதல் பழமுதிர்சோலை வரை உள்ள இந்தத் தலங்கள் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களாகத் திகழ்கின்றன. சங்க இலக்கியமான 'திருமுருகாற்றுப்படை' முருகனை தமிழ் நிலத்தின் அரசனாகவே கொண்டாடுகிறது.

தத்துவச் சிறப்பு

தமிழுக்கும் முருகனுக்கும் உள்ள பிணைப்பு இலக்கண ரீதியாகவும் ஆச்சரியமானது. தமிழின் உயிர் நாடியான 'அ' முதல் 'ஔ' வரையிலான 12 உயிர் எழுத்துகளும், முருகப்பெருமானின் வலிமைமிக்க 12 தோள்களாக கருதப்படுகின்றன. மொழிக்கு வலிமை சேர்க்கும் 18 மெய் எழுத்துகள், அவரது 18 கண்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன. (சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகப் பெருமானின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு நெற்றிக்கண் இருப்பதாக நம்பிக்கை) இவை அனைத்திற்கும் மேலாக, தமிழில் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் 'ஃ' எனும் ஆயுத எழுத்து, தீமைகளை அழித்து அறிவை வழங்கும் முருகனின் கையில் உள்ள 'வேல்' ஆகத் திகழ்கிறது.

இவ்வாறு தமிழ் நெடுங்கணக்கின் மொத்த வடிவமே ஒரு உருவம் பெற்று வந்ததால் தான், 'தமிழையும், முருகனையும் பிரித்துப் பார்க்க முடியாது' எனப் பெரியோர் கூறுகிறார்கள். தமிழ் இலக்கணமே தெய்வமாக வடிவெடுத்திருப்பதே முருக தத்துவத்தின் தனிச்சிறப்பாகும்.

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றார் பாரதிதாசன். அந்தத் தமிழை தனது உயிர்மூச்சாகக் கொண்டு, உலகெங்கும் வாழும் தமிழர்களை தனது 'வேல்' கொண்டு காப்பதால் அவர் 'தமிழ்க்கடவுள்' என்று அழைக்கப்படுகிறார். சுவைமிக்க தமிழால் முருகனை துதிப்பவர்களுக்கு துன்பம் இல்லை என்பதே ஆன்மிக நம்பிக்கை.

SCROLL FOR NEXT