புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு முருகன் மலைமேல் ஆறுமுகங்களுடன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இத்தலத்தில் நாரத முனிவருக்கு உற்சவ மூர்த்தி சிலை உள்ளது. விழாக்காலங்களில் நாரதரும் திருவீதி உலா வருகிறார்.
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் விராலிமலையில் மட்டுமே தைப்பூசம் மற்றும் வைகாசி விசாகம் ஆகிய இருநாட்களில் தேரோட்ட விழாவும், தெப்பத்திருவிழாவும் நடைபெறும். இத்தகைய சிறப்புபெற்ற விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் நாகம், பூதம், யானை, சிம்மம், குதிரை மற்றும் பல்லக்கு போன்ற பல்வேறு வாகனங்களில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்றுமுன்தினம் மாலை முருகன் வெள்ளிக்குதிரை வாகனத்தில், தனது மாமன் பெருமாள் வசிக்கும் ஊரான விராலூருக்கு எழுந்தருளி அங்கு மண்டகபடி நிகழ்ச்சியை முடித்து, நேற்று அதிகாலை விராலிமலை வந்தடைந்தார்.
முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
பின்னர் காலை 9 மணிக்கு விநாயகர் சிறிய தேரிலும், முருகன், வள்ளி-தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து 10.30 மணியளவில் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் 4 வீதிகளிலும் வலம் வந்து, 11.30 மணியளவில் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் புதுக்கோட்டை திருக்கோவில்களின் உதவி ஆணையர் ரமேஷ், விராலிமலை தேர்தல் துணை தாசில்தார் காமராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு 4 வீதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமராஜா தலைமையில், மேற்பார்வையாளர் மாரிமுத்து, மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.