சிவாலயங்களில் சிவபெருமானுக்கு எதிரில் நந்தி 'பகவான் காட்சி தருவார். ஆனால் விநாயகருக்கு அருகில் நந்தி பகவான் இருக்கும் சிறப்புமிக்க அரிய தலம்தான், கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள காரண விநாயகர் திருக்கோவில்.
முன்னொரு காலத்தில் இவ்வூருக்கு அடுத்துள்ள கிராம மக்கள், தங்கள் ஊரில் விநாயகர் கோவில் அமைக்க விரும்பினர். அதற்காக, ஒரு விநாயகர் சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். இந்த இடத்துக்கு வந்ததும், வண்டியின் அச்சு முறிந்தது. உடனே, விநாயகர் சிலையை இறக்கி வைத்துவிட்டு, வண்டியை பழுது பார்த்தனர்.
பின்னர், மீண்டும் விநாயகர் சிலையை வண்டியில் தூக்கி வைக்க முயன்றபோது, அவர்களால் சிலையை அசைக்க கூட முடியவில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காகவே விநாயகர் இங்கு இருக்க விரும்புகிறார்' என நினைத்து, அந்த இடத்திலேயே விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, கோவில் எழுப்பினர். இதன் காரணமாகவே இங்குள்ள விநாயகர், 'காரண விநாயகர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஒரு சமயம் ஆங்கிலேயர்கள் இவ்வழியாக சாலை அமைப்பதற்காக கோவிலை அகற்றும்படி கூறினர். அதற்கு மக்கள் மறுப்பு தெரிவித்தும், ஆங்கிலேயர்கள் கோவிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். ஒரு நாள் இரவு ஆங்கிலேய அதிகாரி ஒருவரின் கனவில் ஏராளமான யானைகள் அவரை விரட்டுவதுபோல் தெரிந்தது. இதையடுத்து மனம் மாறிய அந்த அதிகாரி, கோவில் இருந்த இடத்தை மட்டும் வளைவாக விட்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் சாலை வளைவாக இருப்பதை காணலாம்.
இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் விவசாய வேலை செய்துள்ளனர். அவர்கள் கால்நடை விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவபெருமானின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையில் விநாயகரின் அருகில் நந்தி இருப்பது மிகவும் விசேஷமாகும். இங்கு காரண முருகன், ஆஞ்சநேயர், கரிவரதராஜப் பெருமாள் ஆகியோருக்கான சன்னிதிகளும் உள்ளன. விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் சேர்ந்துள்ள விநாயகரை வழிபட்டு செல்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள மத்தம்பாளையத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.