புதுச்சேரி வில்லியனூரில் தூய லூர்து மாதா ஆலயம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகும்.
பிரான்சில் உள்ள லூர்து மாதா தேவாலயத்திற்குப் பிறகு ஆசியாவில் கட்டப பட்ட முதல் ஆலயமாகும்.ஆசிய கண்டத்திலேயே தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்தின் எதிரே குளம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
வில்லியனூர் தூய லூர்து மாதா ஆலயத்தின் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு பின்னர் 6-வது நாளில் தொடங்கும்.அதன்படி, வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து லூர்து அன்னையின் உருவம் தாங்கிய திருக்கொடி மாதா திருக்குளத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின்னர் ஆயர் சகாயராஜ், திருத்தல முற்றத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியை ஏற்றினார். இன்று இரவு 7.30 மணிக்கு திருத்தலத்தின் சார்பில் லூர்து அன்னைக்கு வைர கிரீடம் அணிவித்து தேர் பவனி நடக்க உள்ளது.
திருவிழா நவநாட்களில் 9 நாளும் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி, மறையுரை மற்றும் தேர்பவனி நடைபெற உள்ளன. வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை – கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் ஆண்டு பெருவிழா காலை திருப்பலி நடக்கிறது.
மாலை 6 மணிக்கு வேலூர் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு லூர்து மாதாவுக்கு வைர கீரிடம் அணிவித்து ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
மறுநாள் 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.