வளர்பிறை பஞ்சமியில் வாராகி அம்மனை வழிபட்டால், அனைத்து தடைகளையும் நீக்கி அருளுவாள் தேவி என்கின்றனர் பக்தர்கள். உலகையாளும் மகாசக்தி என்று போற்றப்படுகிறாள் பராசக்தி. சிவத்துக்கே சக்தியாகத் திகழக் கூடிய பராசக்தி, அசுரக்கூட்டங்களை ஒழிப்பதற்காக, அழிப்பதற்காக ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்கிறது புராணம்.
அசுரக்கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தொழித்தவர்களில் வாராகியும் ஒருவர். பராசக்தியிடம் இருந்து அப்படி வந்த சக்திகளில், 7 தேவதைகள், 7 சக்திகள் மிக மிக முக்கியமானவர்கள். அந்த ஏழுபேரும் சப்த மாதர்கள் என்று போற்றி வணங்கப்படுகிறார்கள். சப்த மாதர்களில் பிரமாண்டமான வீரியமும் எதிரிகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு நம் அபயக்குரலுக்கு ஓடோடி வருபவள் வாராகி அம்மன்.
சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. போருக்குச் செல்வதற்கு முன்னரும் போருக்குச் சென்று விட்டு வந்த பிறகும் சப்தமாதர்களை வழிபட்டார்கள் என்கின்றன பழங்கலா கல்வெட்டுக்கள்.
தஞ்சை பெரியகோவிலில் வாராகியை தரிசிக்கலாம். ஆனால் ராஜராஜ சோழன் வாராகிக்கு, பெரியகோவிலில் சந்நிதி எழுப்பவில்லை. பின்னாளில்தான் வாராகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. வராஹியை வணங்கி வருகிறார்கள் பக்தர்கள்.
வாராகி அம்மனுக்கு மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராகி.