ஆன்மிகம்

வைகாசி விசாகம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி விசாகத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று நடக்கிறது.

இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. உச்சிகால தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபம் வந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி கோவிலில் சாயரட்சை தீபாராதனைக்கு பிறகு வசந்த மண்டபத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது .

அதைத் தொடர்ந்து மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது.

சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி விசாகத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், சுகாதார வசதி, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் நாளை வரை 4 நாட்கள் மட்டும் ரூ.100 தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக 150 கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வெவ்வெறு இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.