தமிழர்களின் முதன்மை கடவுளாகவும், அழகு, ஆகியவற்றின் வடிவமாகவும் போற்றப்படுபவர், முருகப்பெருமான். இவர் கந்தன், கடம்பன், கார்த்திகேயன், சுப்பிரமணியன், வேலன், சண்முகன், குமரன் என பல திருநாமங்களில் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை போன்ற முருகப்பெருமானுக்கு உகந்த பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய விழாதான், வைகாசி விசாகம்.
முருகப்பெருமான் அவதரித்த புண்ணிய நாளாக வைகாசி விசாகம் சிறப்பிக்கப்படுகிறது. வைகாசி மாதத்தில் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாள்தான், வைகாசி விசாகம் ஆகும். தமிழ்நாடு மட்டும் இன்றி, பல உலக நாடுகளில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாள், முருகப்பெருமானின் பரிபூரண அருளை பெறும் நாளாக கருதப்படுகிறது.
சூரபத்மன் எனும் அசுரன், பல ஆண்டுகள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக பல அரிய வரங்களை பெற்றான். பெண்ணின் வயிற்றில் பிறக்கும் குழந்தையால் மரணம் நேரக்கூடாது, சிவசக்தியால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் எனும் வரத்தையும் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தின் வலிமையால் ஆணவம் கொண்ட சூரபத்மன், தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான். இந்திரனின் மகனான ஜெயந்தன் முதலான தேவர்களை சிறையில் அடைத்தான்.
இதனால் வருத்தம் அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்று, தன்னுடைய நெற்றிக்கண்ணை திறக்க, அதிலிருந்து 6 தீப்பொறிகள் வெளிப்பட்டன. அந்த 6 தீப்பொறிகளும் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் விழுந்தன. பின்பு, அந்த 6 தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. இதையடுத்து சிவபெருமான், அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகை பெண்களிடம் ஒப்படைத்தார்.
அவ்வாறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி, தன் சக்தியால் ஒன்றிணைத்து ஆறுமுகமும், 12 திருக்கரங்களும் கொண்ட ஒரே உருவமாக மாற்றினார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் 'கார்த்திகேயன்' என்றும், ஆறுமுகங்களை கொண்டவன் என்பதால் 'ஆறுமுகன்' என்றும் அழைக்கப்பட்டார். பார்வதி தேவி, தன் சக்தியின் வடிவான வேலை முருகனுக்கு கொடுத்தார். அந்த வேலை கொண்டு முருகப் பெருமான், சூரபத்மனையும், அவர்களது சகோதரர்களையும் வதைத்து, தேவர்களை காத்தார். இவ்வாறு தீமையை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட முருகப் பெருமான் அவதரித்த தினமே ‘வைகாசி விசாகம்' ஆகும்.
வைகாசி விசாகம் தினத்தன்று, முருக பக்தர்கள் ஏராளமானோர் விரதம் இருந்து வழிபடுவார்கள். அதிகாலையில் நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை செய்யும் இடத்தை தயார் செய்ய வேண்டும். பின்னர், முருகப்பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், இனிப்பு அப்பம், தேன், பால், பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். பின்னர் தீபம் ஏற்றி, கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்குரிய பாடல்களை படிக்க வேண்டும்.
சிலர் முருகப்பெருமானுக்கு பால் குடம் எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும் வழிபடுவார்கள். முருகப் பெருமான் ஆலயங்களுக்கு பாத யாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வைகாசி விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருகன் கோவில்களில் மகா உற்சவமும், முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.
இந்த ஆண்டு வைகாசி விசாகம், வைகாசி மாதம் 16-ந் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும், மகிழ்ச்சி நிலவும், எதிர்மறை சக்திகள் நீங்கும், சகல நன்மைகளும் வந்துசேரும்.