ஆன்மிகம்

வைகாசி விசாகம் சிறப்புகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதரித்த புனித நாளாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மேலும் பல முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றை பற்றிப் பார்ப்போம்...

* தர்மத்தின் அதிபதியான எமதர்மர் அவதரித்தது வைகாசி விசாக நாளில்தான். எனவே அன்றைய தினம் எமதர்ம ராஜாவை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன், சிவபெருமானிடம் இருந்து பாசுபதம் எனும் ஆயுதத்தை பெற்றது இந்த வைகாசி விசாகம் நாளில்தான் என்று கூறப்படுகிறது.

* கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் முக்கிய நிகழ்வாக விசாகத்தன்று, முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது.

* வைகாசி விசாக நாளில் தான், பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானரான நம்மாழ்வார் அவதரித்தார்.

* சித்தார்த்தர் எனும் இயற்பெயர் கொண்ட புத்தர் அவதரித்ததும், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி விசாக நாளில் என்று கூறப்படுகிறது.

* அரியலூர் மாவட்டம் திருமழபாடி திருத்தலத்தில் 'மழுவேந்திய நாதர்' எனும் திருநாமத்தில் அருள் பாலிக்கும் சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக மழு ஆயுதம் ஏந்தி திருநடனம் புரிந்தது வைகாசி விசாகத்தன்றுதான்.

* ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது, சிம்மாச்சலம் வராக லட்சுமி நரசிம்மர் கோவில். இங்கு ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் (சுமார் 500 கிலோ) அருள்பாலிக்கும் மூலவர், வைகாசி விசாகத்தன்று மட்டும் சந்தனம் முழுவதும் களையப்பட்டு இயற்கை தோற்றத்தில் காட்சி தருகிறார்.