அம்பை அருகே வாகைகுளம் வாகைபதியில் உள்ள நாராயண சுவாமி கோவிலில் தை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு தண்டிகை வாகனத்தில் அய்யா ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பணிவிடைகளும் அன்னதர்மமும், வாகன பவனியும் நடைபெறுகிறது.
இன்று (சனிக்கிழமை) சுவாமி கருட வாகனத்திலும், 3-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிங்க வாகனத்திலும், 4-ம் திருநாளில் அன்ன வாகனத்திலும் 5-ம் திருநாளில் சூரிய வாகனத்திலும், 6-ம் திருநாளிலும் நாக வாகனத்திலும், 7-ம் திருநாளில் பூப்பல்லக்கிலும், 8-ம் திருநாளில் குதிரை வாகனத்திலும், 9-ம் திருநாளில் அனுமன் வாகனத்திலும், 10-ம் திருநாளில் காலை 11 மணிக்கு கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவு 2 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திர வாகனத்தில் பவனிவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தினசரி காலை மதியம், இரவு மூன்று வேளைகளிலும் சிறப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பு உச்சிப்பால் தர்மம், இரவு 8 மணிக்கு அன்ன தர்மம், காலை, மாலை வாகன பவனியும் நடக்கிது.
11-ம் திருநாளான 12-ந் தேதி பகல் 2 மணிக்கு தேரோட்டமும், இரவு 11 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
விழாவில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை சிங்காரி மேளம் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வாகைபதி அன்புகொடி மக்கள் செய்து வருகின்றனர்.