ஆன்மிகம்

திருமணத்தடை நீக்கும் துளசி திருமணம்

மகாவிஷ்ணு, சலந்தர் உருவம் கொண்டு அவனது வீட்டிற்குச் சென்றார்.

திருமணத்திற்குரிய சடங்குகளை் செய்து, துளசிக்கும் சாளக்கிராமத்திற்கு நடத்தி வைக்கப்படும் திருமணமே 'துளசி திருமணம்' என்று அழைக்கப்படுகிறது.

துளசி வழிபாடு

இந்து சமய வழிபாட்டில் துளசி வழிபாடு, புனிதமானதாகக் கருதப்படுகிறது. மகாவிஷ்ணுக்கு பிரியமானதாக துளசி இருக்கிறது. இதன் காரணமாகவே துளசியை 'விஷ்ணுப்பிரியா' என்றும் அழைப்பார்கள். விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் சாளக்கிராமத்திற்கும், துளசிக்கும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

பிருந்தா - சலந்தர்

துளசி திருமணம் பற்றியும், அதன் சடங்குகள் குறித்தும் பத்ம புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. புராணத்தின்படி துளசிச் செடியானது, முன் காலத்தில் 'பிருந்தா' என்ற அசுர குலப் பெண்ணாக இருந்தாள். அவள் சலந்தர் என்ற அசுர மன்னனை மணந்துகொண்டாள். சலந்தர் கடுமையான தவம் இருந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். அதன் காரணமாக மூவுலகங்களைப் கைப்பற்ற போர் புரிந்தான்.

விஷ்ணு வழிபாடு

பிருந்தாவுக்கு, மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி இருந்தது. நாள் தவறாமல், விஷ்ணுவை அவள் வழிபட்டு வந்தாள். பிருந்தாவின் விஷ்ணு வழிபாடு காரணமாக, சலந்தரை எவராலும் போரில் வெற்றிகொள்ள முடியவில்லை. இறுதியாக அவன், சிவபெருமானுடன் போரிட்டான். சலந்தரை தன் சூலாயுதத்தால் பலமுறை சிவபெருமான் குத்தினார். பிருந்தாவின் பக்தி, பதிவிரதைத் தன்மை காரணமாக, அவனுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. எனவே தேவர்கள் அனைவரும், மகாவிஷ்ணுவிடம் இதற்கொரு தீர்வை கண்டுபிடிக்கும்படி வலியுறுத்தினர்.

பிருந்தா சாபம்

இதையடுத்து மகாவிஷ்ணு, சலந்தர் உருவம் கொண்டு அவனது வீட்டிற்குச் சென்றார். கணவர்தான் வந்திருக்கிறார் என்று நினைத்த பிருந்தா, அவருக்கு பாத பூஜைகள் செய்தார். கணவனைத் தவிர வேறு ஒருவரின் பாதங்களைத் தொட்டு, பூஜை செய்ததால் அவளது பதிவிரதைத் தன்மை குறைந்தது. இயைடுத்து நடந்த போரில் சலந்தரை வதம் செய்தார், சிவபெருமான். இதனால் கோபம் கொண்ட பிருந்தா, தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி மகாவிஷ்ணுவை சாளக்கிராமக் கல்லாக மாறும்படி சாபம் அளித்தாள். பின்னர் தன் உயிரையும் மாய்த்துக்கொண்டாள்.

பிரபோதினி ஏகாதசி

அவளது ஆன்மாவை, மகாவிஷ்ணு ஒரு தாவரத்திற்கு மாற்றினார். அதுவே பின்னால் 'துளசி' என்று அழைக்கப்பட்டது. 'துளசி' என்பதற்கு 'ஒப்பற்றது', 'ஈடு இணை இல்லாதது' என்று பொருள். மறுபிறவியில் துளசியாக அவதரித்த பிருந்தாவை, சாளக்கிராமமாக இருந்த விஷ்ணு மணந்துகொண்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அந்த திருமணம் ஒரு பிரபோதினி ஏகாதசியில் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 'பிரபோதினி' என்றால் 'விழித்தெழுதல்' என்று பொருள். மகாவிஷ்ணு துயில்கொள்ளும் நான்கு மாதங்களை 'சாதுர்மாசம்' என்று குறிப்பிடுவர்.

கார்த்திகை மாத பவுர்ணமி

ஆடி மாதத்தில் வரும் சயனி ஏகாதசியில் யோக நித்திரைக்குச் செல்லும் மகாவிஷ்ணு, கார்த்திகை மாதத்தில் வரும் பிரபோதினி ஏகாதசியில் விழிக்கிறார். இந்த காலமானது திருமணப் பருவத்தின் தொடக்கத்தை குறிப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட பிரபோதினி ஏகாதசிக்கும், கார்த்திகை மாத பவுர்ணமிக்கும் இடையே உள்ள எந்த நேரத்திலும் இந்த துளசி திருமணம் நடத்தப்படுகிறது. கார்த்திகை வளர்பிறையில் 15 நாட்களில், 11 அல்லது 12-வது நாளில் இந்த விழா நடைபெறும். இந்த நிகழ்வானது ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தபடி மாறுபடவும் செய்யும்.

துளசி செடி

சில வீடுகளின் முற்றத்தில் துளசிச்செடி இருக்கும். அப்படி இல்லாதவர்கள், இந்த நிகழ்வுக்காக துளசிச் செடியை கொண்டு வந்து வைத்துக்கொள்ளலாம். மாலை நேரத்தில் திருமண நிகழ்வை நடத்த வேண்டும். பிருந்தாவின் ஆன்மா இரவில் துளசி செடியில் தங்கியிருந்து, காலை வெளியேறுவதாக நம்பப்படுகிறது. துளசியைச் சுற்றி சிவப்பு நிற ஆடை கட்டி, பந்தல் அமைப்பார்கள். காகிதத்தில் முகம் வரைந்து, செடியில் இணைப்பார்கள். விஷ்ணுவாக, வீட்டில் உள்ள சாளக்கிராம கல்லை பயன்படுத்துவார்கள். திருமணத்திற்குரிய சடங்குகளைச் செய்து, துளசிக்கும் சாளக்கிராமத்திற்கு நடத்தி வைக்கப்படும் இந்த திருமணமே 'துளசி திருமணம்' என்று அழைக்கப்படுகிறது.

துளசி கல்யாணம்

துளசி விவாகம் செய்பவர்களின் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி பெருகும். அதோடு திருமணத்தடை உள்ளவர்களுக்கு அது நீங்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத்துணை அமையும். கணவன்- மனைவிக்கும் ஒற்றுமை அதிகரிக்கும். பக்தியுடன் இந்த திருமணத்தை நடத்துபவர்கள், பலயாகங்களைச் செய்த பலனைப் பெறுவார்கள். அதோடு பாவங்கள் நீங்கி, புண்ணியம் வந்துசேரும். மகாலட்சுமியின் வடிவமாகவே துளசியை எண்ணி வழிபடுவதால், இந்த திருமணத்தை செய்பவர்களின் இல்லங்களில் லட்சுமிதேவியின் அருள் நிலைத்திருக்கும்.

SCROLL FOR NEXT