ஆன்மிகம்

நாளை ஆடிப்பூரம்: பெண்கள் வாழ்வில் சுப பலன்களை அள்ளித் தரும் ஆண்டாள் வழிபாடு

கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார்.

கன்னிப்பெண்களை மகிழ்விப்பதும் சுமங்கலிகளை மகிழ்வித்து மங்கலப் பொருட்கள் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும்.

ஆடி மாத விழாக்களில் முக்கியமான ஆடிப்பூரம் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் நாளை காலை 7.22 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் காலை 7:01 மணிக்கு நிறைவடைகிறது.

அனைத்து மாதங்களிலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில்தான்.

ஒருசமயம் நாராயணனிடம் பூமிதேவி, ‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘பூலோகத்தில் வாழ்ந்தும் இக சுகங்களில் பற்று வைக்காமல் என்னிடமே நித்தம் பக்தி செய்து என்னை நினைத்து எனக்குப் பாமாலையும், பூமாலையும் தொடுத்துச் சாத்துகின்ற பாகவதர்களிடம் நான் அளவு கடந்த அன்பு செலுத்துவேன், என்றார்.

பெருமாள் மீது பக்தி

உடனே பூமிதேவி, தான் அத்தகைய பக்தையாக பிறவியெடுக்க அருளவேண்டினார். அதன் படியே, நள வருடம் ஆடி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அன்று நந்தவனத்தில் துளசி மாடத்துக்குக் கீழே இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் உள்ள நாச்சியார் சந்நிதி உள்ள இடத்தில் பூமாதேவி சிறு குழந்தையாக ஆண்டாளாக அவதரித்தாள்.

வடபத்ரசாயி பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக விடியற்காலையில் பூக்குடலையுடன் நந்தவனத்திற்குச் சென்ற விஷ்ணு சித்தர் எனும் பெரியாழ்வார் அந்த சிறு குழந்தையைப் பார்த்தார். அந்த குழந்தையை சுரும்பார் குழற்கோதை அல்லது சுருக்கமாக கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என தனக்குத் தெரிந்த அனைத்தையுமே பெரியாழ்வார் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார்.

கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு பெரியாழ்வார் உயர்ந்த ஞானத்தைப் போதித்தார். கோதையும் கண்ணனையே சிந்திப்பதும் துதிப்பதும் மற்றும் அந்த கோவிந்தன் நினைவாகவே வளர்ந்து வந்தாள். இளமை தொடங்கி பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்தாள் கோதை.

கோதை சூடிக்கொடுத்த மாலையே நறுமணம்

பெரியாழ்வார் தினமும் பூ கொய்து வந்து அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு சாற்றுவதற்கு பூக்கூடையில் வைப்பது வழக்கம். பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை, கோதை, ஒவ்வொரு நாளும் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. பெருமாளும் அதை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டார். இது பெரியாழ்வாருக்கு தெரியாது. ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த மாலையைச் சூடி கண்ணாடியில் கோதை, தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்ததை பெரியாழ்வார் கவனித்துவிட்டார்.

மனவருத்தத்தால் பகவானுக்கு அன்று அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி ‘கோதை சூடிக்கொடுத்த மாலையே நறுமணம் மிக்கதும் எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும்; ஆதலின் அத்தன்மையான மாலையே கொண்டு வருவாய்’ எனச் சொன்னார்.

தனக்கு மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் என பெரியாழ்வார் தெரிந்துகொண்டார். தான் சூடிக் கொடுத்த மாலையை பகவான் ஏற்றுக்கொண்டதால், அன்று முதல் கோதை, ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ எனவும், ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் “ஆண்டாள்” என்றும் போற்றப்படுகிறார். அரங்கநாதரின் பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள் ஆண்டாள். ரங்கநாதரும் அவளுடைய பக்திக்கு வசமாகி கோதையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி கோதையை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினார். மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் வந்து அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான்.

அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையுடன் பலரும் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலை அடைந்தனர். ஸ்ரீரங்கத்தில் நுழைந்ததும் அரங்கனுக்காகவே அலங்கரித்தால் போல் இருந்த ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி பெரிய பெருமாள், சந்நிதியில் சென்று, மறைந்து பரமபதம் அடைந்தாள்.

ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம் முழுவதுமே ஆண்டாளை வழிபடலாம். பிரார்த்தனை செய்து நம்முடைய கோரிக்கைகளை வைக்கலாம். ஒரு அன்னையின் கருணையுடன் நம் குறைகளைக் கேட்டறிவாள் ஆண்டாள். மங்காத செல்வங்களைத் தருகிறாள். ஆண்டாளை நினைத்து பூஜைகள் செய்து, ஒரு செவ்வாய்க்கிழமையோ வெள்ளிக்கிழமையோ சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு என மங்கலப் பொருட்களுடன் புடவை, ரவிக்கை அல்லது ரவிக்கை மட்டுமோ வைத்து கொடுக்கலாம்.

இதனால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும். இதேபோல், சிறுமியருக்கும் வளையல், பொட்டு, கண்ணாடி, மருதாணி முதலான மங்கலப் பொருட்களை வழங்கலாம். வீட்டில், தடைபட்ட மங்கல காரியங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நடைபெற அருளுவாள் ஆண்டாள். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

கன்னிப்பெண்களை மகிழ்விப்பதும் சுமங்கலிகளை மகிழ்வித்து மங்கலப் பொருட்கள் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும். குழந்தை இல்லையே என்று ஏங்குவோருக்கு, விரைவில் சந்தான பாக்கியம் அருளுவாள் ஆண்டாள் அன்னை. பொன் பொருள் சேர்க்கை நிகழும். ஆடை ஆபரணச் சேர்க்கைகளை வழங்குவாள் ஆண்டாள். ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வீட்டிலிருந்தே பல வழிபாடுகளை செய்யலாம். அம்பாள் ஆராதனையை குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம். வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்து, ஆண்டாளுக்கு உரிய தாமரைப்பூ, சிகப்பு நிற ஆடை, கல்கண்டு சாதம் ஆகியவற்றை படைத்து வழிபட்டு தான தர்மம் செய்தால் ஆண்டாளின் பூரண அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.