ஆன்மிகம்

வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறக்கப்பட்டது

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இக்கோவிலில் வீற்றிருக்கும் ஆதி புரீஸ்வர் எப்பொழுதும் கவசத்துடனே காட்சி அளிப்பார். வருடத்தில் 3 நாட்கள் மட்டும் கவசம் இன்றி சாமியை முழுமையாக தரிசிக்க முடியும்.

இந்த நிலையில், பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் மாலை ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறக்கப்பட்டு புணுகு சாம்பிராணி தைலாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். நேற்றும் ஆதிபுரீஸ்வரர் கவசம் இன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் அணிவிக்கப்படுகிறது.