ஆன்மிகம்

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்

மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர், முறையே அழித்தல், காத்தல், படைத்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

4 ராஜகோபுரங்கள் உள்பட 9 கோபுரங்களுடன் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த ஆலயத்தில், அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி தருகின்றனர்.

சிவபெருமான்

மனிதர்கள் வாழும் பூமியும், இந்த பூமியைப் போலவே எண்ணற்ற கோள்களைக் கொண்டு இயங்கி வரும் பிரபஞ்சமும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களுக்கு கட்டுப்பட்டு இயக்குவதாக, ஆன்மிகம் சொல்கிறது. அறிவியலும் அதை ஒப்புக்கொள்கிறது. பிரபஞ்சத்தை இயக்கும் ஐம்பெரும் பூதங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக சிவபெருமானை ஆன்மிகம் சுட்டுகிறது. அதை பறைசாற்றும் வகையில்தான், ஐம்பெரும் பூதங்களையும் வெளிப்படுத்தும் வகையில் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

திருவண்ணாமலை

இதில் நெருப்பு தலமாக அமைந்த சிவாலயம்தான், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம். திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும். காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும். தில்லை என்னும் சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். திருமறைக்காட்டில் நீராடினால் முக்தி கிடைக்கும்.

அண்ணாமலையார் ஆலயம்

மேற்குறிப்பிட்ட ஆலயங்களுக்கு எல்லாம் நாம் நேரில் சென்றால்தான், முக்தி என்னும் நிலையை அடைய முடியும். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே மனதார நினைத்தாலேயே முக்தியைத் தரும் ஆலயமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திகழ்கிறது. அதனால்தான் 'அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி' என்று சொல்லியிருக்கிறார்கள்.

மும்மூர்த்திகள்

மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர், முறையே அழித்தல், காத்தல், படைத்தல் பணிகளை செய்து வருகின்றனர். இவர்களில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் 'யார் பெரியவர்?' என்பதில் வாதம் உருவானது. “என் தொப்புக் கொடியில் இருந்து தோன்றியவன் நீ, அதனால் நான் தான் பெரியவன்" என்றார் விஷ்ணு. “இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் படைப்பவன் நான், அதனால்தான் அதைக் காக்கும் பணி உங்களுக்கு வந்திருக்கிறது. எனவே நான்தான் பெரியவன்” என்றார், பிரம்மன். இவர்களின் இந்த வாதத்தால் உலக இயக்கத்தின் சமநிலையில் பிரச்சினை வரும் நிலை உருவானது. இதையடுத்து சிவபெருமான் அங்கே தோன்றி, “உங்களில் யார் என்னுடைய அடி (கால் பாதம்)யையோ, முடி (தலை)யையோ கண்டு வருகிறீர்களோ, அவரே பெரியவர்” என்று கூறினார்.

அந்த போட்டிக்கு விஷ்ணுவும், பிரம்மாவும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சிவபெருமான் அடியும், முடியும் காண முடியாத வகையில், அக்னி பிழம்பாக ஓங்கி உயர்ந்து விண்ணுக்கும், மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார். சிவனின் தலையைக் காண்பதற்காக பிரம்மன், அன்னப் பறவை வடிவம் எடுத்து வானில் பறந்து சென்றார். அதேபோல் சிவனின் அடியைக் காண்பதற்காக விஷ்ணு, வராக வடிவம் எடுத்து நிலத்தை குடைந்து பூமிக்குள் சென்றார். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை.

தாழம்பூவின் பொய் சாட்சி

ஒரு கட்டத்தில் பிரம்மாவும், திருமாலும் திரும்பி வந்தனர். அதில் திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டு விட்டதாக பொய் சொன்னதுடன், சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றை, பொய் சாட்சி சொல்லும்படியும் அழைத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், 'பூலோகத்தில் பிரம்மனுக்கு ஆலயங்கள் இருக்காது' என்றும், 'பொய் சாட்சி சொன்ன தாழம் பூவை என்னுடைய பூஜையில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்றும் சாபம் அளித்தார்.

சுயம்பு லிங்கம்

சிவபெருமான் அடி முடி காண முடியாத வகையில், நெருப்பு பிழம்பாக உருமாறி நின்ற இடம், திருவண்ணாமலை என்று புராணங்கள் சொல்கின்றன. அந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள் அனைவரும், ஈசனை அந்த இடத்திலேயே தங்கி அருள்பாலிக்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான், மலை வடிவமாக மாறினார். அந்த பிரமாண்ட மலைக்கு எப்படி மாலை சூட்டி, அபிஷேகம் செய்து வழிபடுவது என்று தேவர்கள் அனைவரும் திகைத்து நிற்க, இறைவன் மலை அடிவாரத்தில் சுயம்பு லிங்கமாக தோன்றினார்.

அண்ணாமலையார் - உண்ணாமுலையம்மன்

அந்த லிங்கத்தை அடிப்படையாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் திருக்கோவில் உருவாகி இருக்கிறது. 4 ராஜகோபுரங்கள் உள்பட 9 கோபுரங்களுடன் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த ஆலயத்தில், அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். தவிர பல்வேறு பரிவார தெய்வங்களின் சன்னிதிகளும் இங்கே இருக்கின்றன.

இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் கயிலாய மலைக்கு ஒப்பாக, தென் பகுதியில் உள்ள திருவண்ணாமலை போற்றப்படுகிறது. கயிலாயத்தை ஈசன் தன்னுடைய இருப்பிடமாக மாற்றிக்கொண்டதால், அதற்குச் சிறப்பு. ஆனால் தானே மலையாக அமர்ந்திருப்பதால், திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்பு உண்டு. இந்த மலை பல யுகங்களைக் கடந்தும் இங்கே இருப்பதாக புராணம் சொல்கிறது.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியதாக சொல்லப்படுகிறது. இந்த மலை 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இந்த மலையில் ஒருவித காந்த சக்தி இருப்பதாகவும், வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிவபெருமான் அக்னி ஜோதியாக அடி முடி காண முடியாதபடி அனைவருக்கும் காட்சி தந்த தினம், 'திருக்கார்த்திகை திருநாள்' என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே இங்குள்ள அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்களுக்கும் மேலாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார், பரிவார மூர்த்திகளுடன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருவார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருக்கார்த்திகை அன்று, அங்குள்ள மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந் தேதி துர்க்கை உற்சவத்துடன் தொடங்கியது. 15-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. 21-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. நாளை காலை 24-ந் தேதி காலை பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் கார்த்திகை தீபமும் ஏற்றப்பட இருக்கிறது.

SCROLL FOR NEXT