ராஜ அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் 
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் மகா தீப விழா நாளை நிறைவு பெறுகிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று இரவு சுப்பிரமணியர் உற்சவமும், நாளை சண்டீகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

மாலை மலர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் இன்று 4-வது நாளாக பக்தர்களுக்கு காட்சி தருகிறது.

திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் கோவில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர். அப்போது அருணாசலேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து இரவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இன்று இரவு சுப்பிரமணியர் உற்சவமும், நாளை சண்டீகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.