சென்னை திருவேற்காடில் உள்ள பிரசித்திபெற்ற தேவி கருமாரி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளினார். அதைதொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன், தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
சன்னதி தெரு, தேரோடும் வீதி என கோவிலின் முக்கிய நான்கு மாட வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ரமேஷ் உள்பட சென்னை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களும் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையாளர் வான்மதி செய்து உள்ளார்.