ஆன்மிகம்

திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவில் வரலாறு

நாள் முழுவதும் நடைசாற்றப்படாமல் இருப்பது திருவேற்காடு தலத்தின் சிறப்பாகும்.

தமிழகம் தாய்தெய்வ வழிபாட்டின் சிறப்பிடமாகத் தொன்றுதொட்டு விளங்கிவரும் பகுதியாகும். சாக்தம் என்ப்படும் தாய் தெய்வ வழிபாடு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அத்தகைய வரிசையில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோவில் புகழ் பெற்ற சக்தி தலமாகும்.

தொண்டை மண்டலத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் திருவேற்காடு 23வது தலமாகும். நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த ஊர் திருவேற்காடு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வெள்வேல் மரங்கள் மிகுந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இவ்வூர் சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது.

கோவில் அமைப்பு

மூலதெய்வமான கருமாரியம்மன் கிழக்குப் பார்த்து அமர்ந்த நிலையில் காணப்படுகின்றாள். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் திருச்சுற்று வளாகம் ஆகிய அனைத்தும், தற்காலக் கட்டுமானங்களாகும்.

முதல் திருச்சுற்று தெய்வங்களாகத் திருக்கோயிலின் முன்புறம், கிழக்குத் திசை நோக்கி வலம்புரி விநாயகர் சன்னதியும், வடகிழக்கில் சீனிவாசப்பெருமாள் சன்னதியும், தென் கிழக்கில் நவக்கிரக சன்னதியும், வடமேற்கில் வேற்கண்ணியம்மன் சன்னதியும், வடக்கில் தென்திசை நோக்கி முருகன் சன்னதியும், மரச்சிலையம்மன் சன்னதியும் உள்ளன.

இரண்டாம் திருச்சுற்று தெய்வங்களாகத், தெற்கில் தென்திசை கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதியும், தென் மேற்கில் அங்காள பரமேஸ்வரி சன்னதியும், கிழக்குத் திசை நோக்கி பிரத்தியங்கரா தேவி சன்னதியும், ஏழு அம்மன் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன்முருகன் சன்னதியும், வடக்குத் திசை நோக்கி துர்க்கை சன்னதியும், தென்திசை நோக்கி பைரவர் சன்னதியும் அமைந்துள்ளன.

திருக்கோவிலின் கிழக்குப்புறத்தில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இதன் எதிரில் திருநீற்றுப்பொய்கை எனப்படும் திருக்குளம் அமைந்துள்ளது. கோவிலின் வடகிழக்கில் புற்றுக்கோவில் உள்ளது. இரண்டு திருச்சுற்றுடன் கூடிய திருக்கோவிலாகும்.

தல வரலாறு

பிரளயத்தின் யுகமுடிவில் வெள்ளம் பெருகி உலகை மூழ்கவைத்தப்பின் சிவபெருமான் மீண்டும் உலகைப் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியப்பின் வேதங்களைக் குறிப்பிட்ட இடத்தில் மரங்களாக உருவாக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள்.

அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்முர்த்திகளும் தோன்றினர். மீண்டும் அகில அண்ட இயக்கம் ஆரம்பமானது. இவ்வாறு வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய அவ்விடத்தின் ஒரு பகுதி தேவர் கண்ட மடு என்று அழைக்கப்பட்டது. இந்த வேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

தேவி கருமாரி..

இத்தலத்தின் தூணில் தேவி கருமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் இருப்பதுடன், அகிலமெல்லாம் பக்தர்களைக் காத்து அருள்புரியும் அன்னையாகத் தனித்து, மேல் இரு கரங்களில் டமருகம், திரிசூலமும், கீழ் இரு கரங்களில் கட்கம் கபாலம் ஏந்தி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த நிலையிலும் ஜுவாலை மகுடத்துடன் சிரசு அம்மனாகவும், இங்கு கோவில் கொண்டிக்கிறார். அம்மனுக்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

திருவிழாக்கள்

தைமாத பிரம்மோற்சவம், தைப்பூசம் மற்றும் சித்ரா பௌர்ணமி இலட்சார்ச்சனை விழா, மாசிமகத் திருவிழா, ஆடிப்பெருவிழா, நவராத்திரி விழா, கந்தர்சஷ்டி விழா, தனுர் மாத பூஜை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடைபெறுகிறது.

திருவேற்காடு சிறப்புகள்

அரவம் தீண்டி மரணம் நிகழா திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது. பாலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது சிறப்பு. ஆதவனுக்கு அன்னை அருள்புரிந்த தலமாகும். இத்தலத்தில் அம்மையப்பன் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்சியளித்துள்ளார்.

முருகப்பெருமான் இத்தலத்து அன்னையினைத் தொழுது, அவரது திருக்கரத்தால் பெற்ற வேலால் உருவாக்கிய வேலாயுத தீர்த்தம் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

(நாள் முழுவதும் நடைசாற்றப்படாமல் இருப்பது திருவேற்காடு தலத்தின் சிறப்பாகும்.)