திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் மொட்டை அடிக்க திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம். 
ஆன்மிகம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை மலர்

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். வருடந்தோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை மற்றும் அந்த மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வதோடு, மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பு காரணமாக புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதற்கிடையே 2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், நேற்று வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மொட்டை அடிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் வாங்கி சென்றனர். இதனால் மொட்டை அடிக்கும் இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடாமல் இருக்கும் வகையில், கோவில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.