திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம். 
ஆன்மிகம்

சித்திரை வசந்த உற்சவம் நிறைவு: அய்யங்குளத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை மலர்

சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

முன்னதாக 9-ந் தேதியன்று மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.


நேற்று சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்திலும், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் தனித்தனி வாகனத்தில் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து நேற்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.