பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக போற்றப்படுவது, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில், மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 14-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்்கு கொடியேற்றம் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது.
அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நேற்று மாலை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் கைலாச வாகனத்திலும், அகிலாண்டேஸ்வரி கிளி வாகனத்திலும் வீதி உலா வந்தனர். 5-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) மாலை சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.
இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரியதேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருகின்றனர். இதைத்தொடர்ந்து விநாயகர், சுப்ரமணியர் எழுந்தருளிய சிறிய தேரை காலை 5.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோடும் வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடையும்.
பின்னர் காலை 6.50 மணிக்கு ஜம்புகேஸ்வரர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கின்றனர். தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்த பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும். அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலிப்பார். மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும். பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயபிரியா மற்றும் கோவில் பண்டிதர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.