திருவானைக்காவல் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி. 
ஆன்மிகம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மாலை மலர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்்கு கொடியேற்றம் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.


சிறப்பு அலங்காரத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 5.30 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் காலை 7.05 மணிக்கு மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது.

தொடர்ந்து 7.15 மணிக்கு அம்மன் தேர், வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேரானது, சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 11.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தின் போது, கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வாணவேடிக்கை நடைபெற்றது. தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் சிவ, சிவ, ஓம் சக்தி உள்ளிட்ட பக்தி கோஷங்கள் எழுப்பினர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.