அதைத்தொடர்ந்து துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் மகா புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நடைபெறுவதால் காவிரி உற்பத்தியாகும் குடகுமலை முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரையிலும் உள்ள முக்கிய இடங்களில் கொண்டாடப்படுகிறது.அதன்படி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி காவிரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில் கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. பின்னர் புஷ்கர யாகம் நடைபெற்றது. தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் தலைமையில் தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை நிறுவனர் டி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தஞ்சை மாவட்ட முன்னாள் கலெக்டர் கங்கப்பா ஆகியோர் முன்னிலையில் இந்த யாகம் நடந்தது. குருக்கள் திருச்செந்தூர் சர்மா மற்றும் குழுவினர் காவிரி புஷ்கர பூஜைகளை செய்தனர்.
திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் காவிரி மகா புஷ்கர யாகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
இதில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர சர்மா, சென்னை டாக்டர் தியாகராஜன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தேவஸ்தானம் நடராஜ சாஸ்த்திரி, திருப்பூந்துருத்தி அப்பர் திருமடத்தின் துறை கணேசனார், அம்மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்த சேவா ஆஸ்ரம சுவாமி கிருஷ்ணானந்தா, சதுரகிரி சித்தர் தங்கமுருகன் மற்றும் தசமிபாலு, பழஅடியார், வேலாயுதம், பழனிநாதன், குஞ்சிதபாதம், அறக்கட்டளை மாவட்ட தலைவர் லட்சுமி நரசிம்மன், பா.ஜனதா நிர்வாகி சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குழாய் மூலம் வரும் தண்ணீரில் பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி யாகம் முடிந்தவுடன் காவிரி ஆற்றில் இறங்கி குழாய் மூலம் வந்த தண்ணிரில் பக்தர்கள் அனைவரும் நீராடி காவிரி தாயை வணங்கினர்.