திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா 
ஆன்மிகம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு ஐயாறப்பர் ஆலய தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்து காட்சி கொடுக்கும் அப்பர் கயிலைகாட்சி விழா நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் தருமபுர ஆதீன இளையசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருவையாறு விழாக்கோலம் பூண்டிருந்தது. விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு

பெரியண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.