திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுவது வழக்கம். விழாவில் வெளியூர், வெளிமாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டு செல்வார்கள்.
அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் அப்பர் சன்னதியில் (அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும்) ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி நடைபெறும். அப்போது திருவையாறே விழா கோலமாக காட்சி அளிக்கும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா வருகிற 20-ந்தேதி வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 20-ந் தேதி ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுமா? என பக்தர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.